/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கல்லுாரி மைதானத்தில் தி.மு.க., கூட்டத்துக்கு தடை கோரி வழக்கு; உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
/
கல்லுாரி மைதானத்தில் தி.மு.க., கூட்டத்துக்கு தடை கோரி வழக்கு; உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
கல்லுாரி மைதானத்தில் தி.மு.க., கூட்டத்துக்கு தடை கோரி வழக்கு; உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
கல்லுாரி மைதானத்தில் தி.மு.க., கூட்டத்துக்கு தடை கோரி வழக்கு; உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
ADDED : டிச 27, 2025 07:19 AM
மதுரை: உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லுாரி மைதானத்தில் தி.மு.க.,கூட்டம் நடத்த தடை கோரிய வழக்கில் அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை. கள்ளர் பள்ளிகளின் முன்னாள் மாணவர்கள் சங்க செயலாளர் போஸ் தாக்கல் செய்த பொதுநல மனு:
கள்ளர் பொது நிதி அமைப்பின் வாரிசு சங்கம் தான் கள்ளர் கல்வி கழகம். இதன் நுாற்றாண்டு விழாவை 2026 டிச.,22வரை எங்கள் சங்கம் கொண்டாட உள்ளது. உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் (பி.எம்.டி.,)கல்லுாரிக்கு தெற்கே அமைந்துள்ள காலி நிலம் உட்பட பல்வேறு இடங்களில் கல்வி, கலாசார நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
இச்சொத்து கள்ளர் கல்வி கழகத்திற்குச் சொந்தமானது. கள்ளர் சீரமைப்புத்துறையால் நிர்வகிக்கப்படும் பள்ளிகளுக்கும் உரியது. அது கல்வி, சமூக நலன் சார்ந்த நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. நுாற்றாண்டு விழா நடத்த அந்நிலத்தை பயன்படுத்த அனுமதி கோரி கலெக்டர், கல்லுாரிக் கல்வி இணை இயக்குனருக்கு மனு அனுப்பினோம். பதில் இன்றி நிலுவையில் உள்ளன. தி.மு.க., எம்.பி., கனிமொழி இன்று (டிச.,27) பங்கேற்கும் கூட்டத்திற்காக அந்த மைதானத்திலுள்ள மரங்களை தி.மு.க., நிர்வாகி இளமகிழன் அகற்றியுள்ளார். அனுமதி இன்றி சட்டவிரோதமாக மரங்களை அகற்றி, நிலத்தை சேதப்படுத்தி, மின்சாரத் திருட்டில் ஈடுபட்டு, அரசியல் கட்சி நிகழ்ச்சி நடத்த அனுமதிக்கப்படுகிறது.
பி.எம்.டி., கல்லுாரி வளாகத்தில் கள்ளர் பொது நிதியின் நுாற்றாண்டு விழாவை நடத்த அனுமதிக்க வேண்டும். மற்றவர்கள் குறிப்பாக தி.மு.க.,வினர் தங்களின் அரசியல் நடவடிக்கைகளுக்காக அவ்வளாகத்தை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் பி.வேல்முருகன், எம்.ஜோதிராமன் அமர்வு தடை விதிக்க மறுத்தது. கலெக்டர், கல்லுாரிக் கல்வி இணை இயக்குனர், கல்லுாரி முதல்வருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தது.

