/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கோயில்களுக்கு வணிக மின் கட்டணம் ரத்து செய்ய வழக்கு: கோர்ட் உத்தரவு
/
கோயில்களுக்கு வணிக மின் கட்டணம் ரத்து செய்ய வழக்கு: கோர்ட் உத்தரவு
கோயில்களுக்கு வணிக மின் கட்டணம் ரத்து செய்ய வழக்கு: கோர்ட் உத்தரவு
கோயில்களுக்கு வணிக மின் கட்டணம் ரத்து செய்ய வழக்கு: கோர்ட் உத்தரவு
ADDED : ஆக 03, 2025 04:56 AM
மதுரை : அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இல்லாத பிற கோயில்களுக்கு வணிக பயன்பாட்டிற்குரிய மின் கட்டணத்தை ரத்து செய்ய தாக்கலான வழக்கில்,'இதில் முடிவெடுக்கும் அதிகாரமுடைய அமைப்பு மின்சார ஒழுங்குமுறை ஆணையம். சட்டத்திற்குட்பட்டு உரிய அமைப்பை அணுகி தீர்வு காணலாம்' என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
திருநெல்வேலி வழக்கறிஞர் பாலாஜி கிருஷ்ணசாமி தாக்கல் செய்த பொதுநல மனு: அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இல்லாத தனியார் கோயில்களுக்கு வணிக ரீதியான பயன்பாட்டிற்குரிய மின் கட்டணத்தை மின்வாரியம் 2017 ல் நிர்ணயித்தது. இது பாகுபடுத்தும் வகையில் உள்ளது. பல கோயில்கள் போதிய வருமானம் இன்றி உள்ளன. தனியார் கோயில்களுக்கு வணிக பயன்பாட்டிற்குரிய மின் கட்டணம் வசூலிக்கும் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். அனைத்து வழிபாட்டு தலங்களையும் சமமாக கருத வேண்டும்.
மற்ற வழிபாட்டுத் தலங்களைப் போல் பாகுபாடின்றி ஒரே மாதிரியான மின் கட்டணத்தை தனியார் கோயில்களுக்கும் நிர்ணயிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் வேலன் ஆஜரானார்.
நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: கட்டண உத்தரவுகளை பொறுத்தவரை, மின்சார சட்டம் மற்றும் விதிகள்படி மேல்முறையீடு செய்யலாம். அதில் முடிவெடுக்கும் அதிகாரமுடைய அமைப்பு மின்சார ஒழுங்குமுறை ஆணையம். இம்மனு ஏற்புடையதல்ல. இருப்பினும் சட்டத்திற்குட்பட்டு உரிய அமைப்பை அணுக மனுதாரருக்கு உரிமை உண்டு. வழக்கு பைசல் செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டனர்.

