/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஜல்லிக்கட்டில் காளையை களமிறக்கும் சென்னை கலைவாணி சீறும் காளைக்கு வீரதீர பயிற்சி அளிக்கிறார்
/
ஜல்லிக்கட்டில் காளையை களமிறக்கும் சென்னை கலைவாணி சீறும் காளைக்கு வீரதீர பயிற்சி அளிக்கிறார்
ஜல்லிக்கட்டில் காளையை களமிறக்கும் சென்னை கலைவாணி சீறும் காளைக்கு வீரதீர பயிற்சி அளிக்கிறார்
ஜல்லிக்கட்டில் காளையை களமிறக்கும் சென்னை கலைவாணி சீறும் காளைக்கு வீரதீர பயிற்சி அளிக்கிறார்
ADDED : டிச 17, 2025 06:44 AM

அலங்காரல்லுார்: 'சென்னையில் பிறந்து வளர்ந்தாலும், மதுரை பகுதியில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் காளையை அவிழ்த்துவிட்டு களம் காண தயாராகி வருகிறேன்'' என்கிறார் சிங்கப்பெண் கலைவாணி.
''பாலமேடு தான் பூர்வீகம் என்றாலும் பிறந்தது, வளர்ந்தது, படித்ததெல்லாம் சென்னை தான். ஜல்லிக்கட்டு போட்டியைக் கூட நான் 'டிவி'யில் தான் பார்த்துள்ளேன். ஆனால் 2026 ஜன.16ல் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி முதல் எல்லா வாடிவாசல்களிலும் எனது வீரா காளையை நானே அவிழ்க்க தயாராக உள்ளேன்'' என்கிறார் கலைவாணி 20.
அவர் கூறியதாவது: என் பெற்றோர் சென்னை வந்து 25 ஆண்டுகளாகிறது. நான் 2 ஆண்டுகளுக்கு முன் உறவுக்காரர் பாலமுருகனை திருமணம் செய்து மதுரை சர்வேயர் காலனிக்கு வந்தேன். திருமணம் முடிந்த 2 மாதங்களில் காளை வாங்கி வளர்க்கலாம் என விருப்பப்பட்டோம். வாங்கிய காளைக்கு 'வீர அழகம்மாள் என்ற குலதெய்வப் பெயரால் 'வீரா' என்று அழைத்தோம்.
இந்தாண்டு பங்கேற்ற 4 போட்டிகளிலும் சிறப்பான வெற்றி, பரிசுகளை பெற்றுள்ளான். எங்கள் வீட்டில் எனக்குத்தான் அவன் செல்லப்பிள்ளை. என் கணவரை பார்த்தால் சீறுவான். கொட்டத்தில் அவிழ்த்துக் கட்ட வேண்டும் என்றால்கூட நான் தான் செல்வேன். அவனுக்கான தண்ணீரை நான்தான் கலந்து தர வேண்டும். வேறு யாராவது கொண்டு போய் வைத்தால் (பாத்திரத்தை) வட்டையை தள்ளி விடுவான்.
பரசுராம்பட்டி கண்மாய் கரையில் நடை, மண் குத்துதல் பயிற்சி தருகிறேன். 'வீரா' இங்கே வா, போ என்ற என் சொல்லுக்கு கட்டுப்படுவான். களத்தில் 'வாடியில்' இருந்து சீறிப்பாய்ந்து வெளியில் வந்து எகிறி குதித்து வீரர்களிடம் தில்லு காட்டுவான். இதற்கு முன் பூனைக் குட்டி வளர்த்துள்ளேன். இன்று புலிக்குளம் காளையை வளர்ப்பேன் என்று நானே எதிர்பார்க்கவில்லை. அவன் காட்டிய பாசத்தால் வாடிவாசலில் நானே அவிழ்த்துவிட தயாராக உள்ளேன். இவன் தவிர, உம்பளச்சேரி கன்று வாங்கி 'காளி' என பெயரிட்டு வளர்க்கிறோம். அவன் குறும்பானவன். 2027ல் களம் காண்பான். நகரில் காளையின் கயிறு பிடித்து நடப்பதே கெத்துதான் என்றார்.

