/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
முதல்வர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சிக்கல்; சிரமப்படும் ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை துறை
/
முதல்வர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சிக்கல்; சிரமப்படும் ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை துறை
முதல்வர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சிக்கல்; சிரமப்படும் ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை துறை
முதல்வர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சிக்கல்; சிரமப்படும் ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை துறை
UPDATED : டிச 24, 2025 07:12 AM
ADDED : டிச 24, 2025 06:43 AM

மதுரை: மதுரை அரசு மருத்துவமனையில் திருநங்கைகளுக்கான செயற்கை மார்பகம் பொருத்துவதற்குத் (இம்ப்ளான்ட்) தேவையான 'சிலிகான்' பொருளை, தமிழ்நாடு அரசு மருந்து சேவை கழகம் (டி.என்.எம்.எஸ்.சி.,) நேரடியாக வழங்க வேண்டும்.
மருத்துவமனையின் ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை துறையின் கீழ் மூன்றாண்டுகளாக 1000 திருநங்கைகளுக்கு பல்வேறு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இவர்களுக்கு முதல்வரின் இலவச காப்பீட்டு திட்டத்தின் கீழ் இதற்காக ரூ.ஒரு லட்சம் வரை செலவழிக்கப்படுகிறது.
வாரத்திற்கு 2 அல்லது 3 பேருக்கு மார்பகம் பொருத்துதல் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. புதிய 'சிலிகான்' பொருளாலான (பிரெஸ்ட் இம்ப்ளான்ட்) மார்பகங்களை டி.என்.எம்.எஸ்.சி., வழங்குவதில்லை. இதனால் தனியார் விநியோகஸ்தர் மூலமே வாங்குவதால் ஒவ்வொருவருக்கும் ரூ.60 ஆயிரம் வரை செலவாகிறது.
மருத்துவமனை உள்கட்டமைப்பு, அறுவை சிகிச்சை, டாக்டர், நர்ஸ்கள் சேவை இலவசமாக வழங்கப்பட்டாலும் செயற்கை மார்பகங்கள் வாங்குவது, அதற்கான தையல் பொருட்கள், அறுவை சிகிச்சைக்கு பின் ஆன்டிபயாடிக் மருந்துகள் வாங்குவதற்கு ரூ.ஒரு லட்சம் வரை செலவாகிறது.
இத்தொகையில் மருத்துவமனை பராமரிப்புக்கு என 20 சதவீதத் தொகை கழிக்கப்பட்டு 80 சதவீதத் தொகையே ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை துறைக்கு வழங்கப்படுகிறது. வரவை விட செலவு அதிகமாக இருப்பதால் 'பிரெஸ்ட் இம்ப்ளான்ட்' பொருளை வாங்குவதற்கு ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை துறையினர் சிரமப்படுகின்றனர்.
மருத்துவமனையின் முட நீக்கியல் துறையில் புதிய செயற்கை இடுப்பு எலும்பு மூட்டு (இம்ப்ளான்ட்) வாங்குவதற்கு நிறைய செலவாகிறது என்பதால் காப்பீட்டுத் தொகையில் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
அதாவது மருத்துவமனைக்கு தரவேண்டிய 20 சதவீத பராமரிப்பு தொகையையும் அத்துறையே கையாள்கிறது. ஆனால் திருநங்கைகளுக்கு அறுவை சிகிச்சை செய்வதற்கான திட்டத்தில் இந்த விதிவிலக்கு இல்லை. இதுகுறித்து தேசிய சுகாதாரத் திட்ட இயக்குநர் முடிவெடுக்க வேண்டும்.
காப்பீட்டுத் திட்டத்தில் 20 சதவீத பராமரிப்புத் தொகையை தராமல் விதிவிலக்கு அளிக்க வேண்டும். இல்லாவிட்டால் டி.என்.எம்.எஸ்.சி., மூலம் நேரடியாக செயற்கை மார்பகங்கள், ஆன்டிபயாடிக் மருந்துகளை வழங்குவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். இதனால் திருநங்கைகள் பலன்பெறுவர்.

