/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சித்திரைத்திருவிழா: போலீஸ் கண்காணிப்பு தீவிரம்
/
சித்திரைத்திருவிழா: போலீஸ் கண்காணிப்பு தீவிரம்
ADDED : மே 07, 2025 02:01 AM
மதுரை: அழகர் கோவில் கள்ளழகர் சித்திரைத் திருவிழாவில் பக்தர்கள் பாதுகாப்பாக தரிசனம் செய்ய மதுரை நகர் போலீஸ் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
முக்கிய பகுதிகளில் சட்டம் ஒழுங்கு, குற்றங்களை கண்காணிக்க 1057 அதிநவீன செயற்கை நுண்ணறிவு கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுவதாக போலீசார் அறிவித்துள்ளனர்.
கள்ளழகர் திருவிழா மே 8 முதல் மே 17 வரை நடைபெறும். குறிப்பாக மே 10ல் எதிர்சேவை, மே 12ல் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு நடைபெறும். பக்தர்கள் வசதிக்காக இந்தாண்டு 3 புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
1 மே 8 முதல் மே 12 வரை 'வைகை வீரன்' எனும் 'க்யூ ஆர்' ஸ்கேன் செய்து பொதுமக்கள் புகார் அளிக்கலாம். 200 இடங்களில் 'க்யூ ஆர்' கோடு வைக்கப்பட்டுள்ளன. ஸ்கேன் செய்து அலைபேசி எண் மற்றும் 'க்யூ ஆர்' ஸ்கேன் மேலே கொடுக்கப்பட்ட நம்பரை டைப் செய்தோ, குரல் பதிவாகவோ, குறுஞ்செய்தியாக புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.
2 தல்லாகுளத்தில் கள்ளழகர் எதிர்சேவை, வைகை ஆறு உள்ளிட்ட பகுதியில் செயற்கை நுண்ணறிவு கேமராக்கள் மூலம் சந்தேகத்திற்குரியவர், குற்றவாளிகள் கண்டறியப்படுவர்.
3 தல்லாகுளத்தில் 3 இடங்களில் 6 ட்ரோன் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும். தேரோட்டம் நடைபெறும் நான்கு மாசி வீதிகளில் 165, கோயில் சுற்றிலும், சித்திரை வீதிகளில் 981 கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்.
திருக்கல்யாணம், தேரோட்ட பகுதி, தல்லாகுளம், தமுக்கம், கோரிப்பாளையம், ஆழ்வார்புரம் உள்ளிட்ட பகுதிகளில் பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களை கட்டுப்படுத்தும் வகையில் நகைகளை பாதுகாக்கவும் 40,000 பாதுகாப்பு ஊக்குகள் போலீசார் வழங்குவர். குழந்தைகள் காணாமல் போவதை தடுக்க அவர்களின் கைப்பட்டைகளில் குழந்தையின் பெயர், பெற்றோரின் பெயர், போலீஸ் கட்டுப்பாட்டு அறை எண், மற்றும் போலீஸ் கமிஷனர் அலுவலக எண் இருக்கும். 1000 கைப்பட்டைகள் அணிவிக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளனர்.