ADDED : மார் 31, 2026 06:08 AM
ஹிந்தியில் ராஷி கண்ணா கவனம்
ஹிந்தியில் அறிமுகமானாலும் தமிழ், தெலுங்கில் தான் அதிகம் நடித்துள்ளார் ராஷி கண்ணா. தெலுங்கில் இவரது நடிப்பில் வெளியான கடைசி இரு படங்களான தெலுசு கடா மற்றும் உஸ்தாத் பகத்சிங் ஆகிய படங்கள் தோல்வியை தழுவின. அதன்பின் அவருக்கு அங்கு பட வாய்ப்புகள் இல்லை. இதனால் ஹிந்தியில் கவனம் செலுத்த துவங்கி உள்ளார். தற்போது இரண்டு, மூன்று படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளாராம்.
ரூ.100 கோடி வசூல் என விளம்பரம்... இப்போ நஷ்டம் என பஞ்சாயத்து
கடந்தாண்டு ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வெளிவந்த படம் 'மதராஸி'. 100 கோடி வசூலித்ததாக அறிவித்தனர். ஆனால் படம் நஷ்டத்தை தழுவியதால் இப்போது பஞ்சாயத்திற்கு வந்துள்ளது. 115 கோடி பட்ஜெட் சொ ல்லி 170 கோடி படத்திற்கு அதிக செலவு வைத்துவிட்டார் முருகதாஸ். தங்களுக்கு 30, 40 கோடி நஷ்டம் என தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, தயாரிப்பாளர் சங்கம், இயக்குனர் சங்கம் ஆகியவற்றில் இப்பட தயாரிப்பாளர் புகார் அளித்துள்ளார். 100 கோடி வசூல், பிளாக் பஸ்டர் ஹிட் என விளம்பரப்படுத்திவிட்டு இப்போது நஷ்டம் என பஞ்சாயத்தில் நிற்கிறது.
இந்தவாரம் 6 படங்கள் ரிலீஸ்
தமிழ் சினிமாவில் இருவாரங்கள் வெளியீட்டில் சுணக்கம் ஏற்பட்டது. ஆனால் இந்தவாரம் ஏப்., 3ல் “கார்மேனி செல்வம், கெஸ்ட், காளிதாஸ் 2, லீடர், மரகத மலை, நீளிரா,” ஆகிய 6 படங்கள் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சரவணனுக்கு ஐஸ் வைக்கும் ஐஸ்வர்யா
துரை செந்தில் குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணனின் 'லீடர்' படம் ஏப்.,10ல் ரிலீஸாகிறது. இதில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள நடிகை லட்சுமி மகள் ஐஸ்வர்யா கூறுகையில் ''படத்தின் ஹீரோ சரவணன் நல்ல மனுஷன். அதை நானே நேரில் பார்த்தேன். இந்த படத்துக்காக ஜெய்ப்பூர் போனோம். அங்கு நல்ல சாப்பாடு, என்னை ராணி மாதிரி பார்த்து கொண்டார். ஒட்டுமொத்த படக்குழுவையும் தங்கமாக பார்த்துக்கிட்டார். இப்படிப்பட்ட லீடர் இருந்தால் வீடும், நாடும் நன்றாக இருக்கும்'' என்றார்.
தேர்தல் நேரத்தில் களமிறங்கும் 'டிஎன் 2026'
நடிகர் தம்பி ராமையா கதையில், அவர் மகன் உமாபதி இயக்கத்தில் நட்டி நட்ராஜ் நாயகனாக நடித்துள்ள படம் 'டிஎன் 2026'. சிருத்தா ராவ், சாந்தினி தமிழரசன், யாஷிகா ஆனந்த், எம்.எஸ்.பாஸ்கர், இளவரசு, தம்பி ராமையா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில் அரசியல் தொடர்பான கதையில் உருவாகி உள்ள இப்படம் ஏப்., 10ல் ரிலீஸ் என அறிவித்துள்ளனர்.
ஜூலையில் '7ஜி ரெயின்போ காலனி 2'
2004ல் செல்வராகவன் இயக்கத்தில் யுவன் இசையில், ரவி கிருஷ்ணா, சோனியா அகர்வால் நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற படம் '7ஜி ரெயின்போ காலனி'. தற்போது இதன் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. செல்வா, ரவி, யுவன் கூட்டணி தொடர நாயகியாக அனஸ்வரா ராஜன் நடிக்கிறார். இடையில் நின்றிருந்த இதன் படப்பிடிப்பு மீண்டும் துவங்கி உள்ளது. படத்தை ஜூலைக்குள் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
மூத்த நடிகர்களுக்கு ஜோடியாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழில் தொடர்ந்து படங்களில் நடித்தாலும் சமீபகாலமாக தெலுங்கில் அதிகம் கவனம் செலுத்துகிறார். கடந்தாண்டு மூத்த நடிகர் வெங்கடேஷ் உடன் 'சங்கராந்திகி வஸ்துனாம்' படத்தில் நடித்தார். அந்த படம் ஹிட் ஆனது. இப்போது மற்றொரு மூத்த நடிகரான நாகார்ஜூனாவின் 100வது படத்தில் நாயகியாக இணைந்துள்ளார். இதில் தபு, சுஷ்மிதா பட் ஆகியோரும் நடிக்கின்றனர். ரா கார்த்திக் இயக்குகிறார்.
