/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரை அரசு மருத்துவமனையில் நீராவி குளியலுக்கு 'மூடுவிழா'
/
மதுரை அரசு மருத்துவமனையில் நீராவி குளியலுக்கு 'மூடுவிழா'
மதுரை அரசு மருத்துவமனையில் நீராவி குளியலுக்கு 'மூடுவிழா'
மதுரை அரசு மருத்துவமனையில் நீராவி குளியலுக்கு 'மூடுவிழா'
ADDED : ஜூலை 11, 2025 03:25 AM
மதுரை: மதுரை அரசு மருத்துவவனை யோகா மற்றும் இயற்கை நல்வாழ்வுத் துறையில் நீராவி குளியல் இயந்திரம் பழுதடைந்து 4 மாதங்களாகியும் சரிசெய்யப்படாததால் நோயாளிகள் ஏமாற்றமடைகின்றனர்.
நோயாளிகளுக்கு இயற்கை சார்ந்த நீர், மண் சிகிச்சை, வாழையிலை சிகிச்சை, வலி நீக்க அகச்சிவப்பு ஒளி சிகிச்சை முகத்திற்கு நீராவி பிடித்தல், உடலுக்கு நீராவி குளியல் சிகிச்சை அளிக்கப்படுகிறது. தோல்நோய், மனஅழுத்தம், சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளோருக்கு இங்கு சிகிச்சை பெற டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர்.
இந்திய மருத்துவத் துறை சார்பில் முதன்முதலில் பத்தாண்டுகளுக்கு முன் மதுரை அரசு மருத்துவமனைக்கு நீராவி குளியல் இயந்திரம் வழங்கப்பட்டது. உடலில் சேரும் நச்சுகளை அகற்ற எளிய வழி நீராவி குளியல். வசதி படைத்தவர்கள் 'ஸ்பா' சென்று கட்டணம் கொடுத்து புத்துணர்வு பெற முடியும். யோகா மற்றும் இயற்கை நல வார்டு ஏழைகளின் 'ஸ்பா'வாக உள்ளது. வலி, வீக்கம், உடல் எடை குறைப்பதற்கும், குழந்தையின்மை சிகிச்சை பெற வருவோரும் வாரம் ஒருமுறை இலவச நீராவி குளியலுக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
உடல் முழுவதும் எண்ணெய் தடவி சிறிய மரப்பெட்டிக்குள் தலையை வெளியே நீட்டியவாறு 5 நிமிடங்கள் வரை நீராவி குளியல் சிகிச்சை பெற்றால் துாக்கமின்மை, மனஉளைச்சல் பிரச்னை குறைந்து விடும். சனி, ஞாயிறுகளில் 50 பேர் வரை பயன்பெற்று வந்த நிலையில் இயந்திரம் பழுதடைந்து 4 மாதங்களாகிறது. அதை சரிசெய்ய முடியாத நிலையில் இந்திய மருத்துவத் துறை புதிய கருவியை வாங்கித் தந்தால் நோயாளிகள் பயன்பெறுவர்.