ADDED : அக் 25, 2024 05:33 AM

மதுரை: மதுரையில் விளாங்குடி, செல்லுார் கண்மாய்கள் நிறைந்ததால் குடியிருப்பு பகுதிகளுக்குள் மழைநீர் தேங்கியதை அடுத்து மாநகராட்சி எல்லைக்குள் நீர்வளத்துறைக்கு சொந்தமான விளாங்குடி கண்மாய், வரத்து கால்வாயை கலெக்டர் சங்கீதா ஆய்வு செய்தார்.
தொடர் மழையால் விளாங்குடி கண்மாயின் கொள்ளளவை மீறிய மழைநீர் கரிசல்குளம், திருமால்நகர், அஞ்சல்நகர், பாண்டியன்நகர் பகுதி குடியிருப்புகளை சூழ்ந்தது. செல்லுார் கண்மாயில் இருந்து வெளியேறிய மழைநீர் செல்லுார், கட்டபொம்மன் நகர், சுற்றியுள்ள குடியிருப்புகளில் தேங்கியது.
மாநகராட்சி மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் மூலம் மழைநீரை அகற்ற கலெக்டர் சங்கீதா உத்தரவிட்டார். வெள்ள நீர் வடிகால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட நிலையில் விளாங்குடி கண்மாய், வரத்து கால்வாயை கலெக்டர் ஆய்வு செய்தார். கண்மாய், வரத்து கால்வாய்களில் தடையின்றி தண்ணீர் செல்வதை நீர்வளத்துறை, மாநகராட்சி கண்காணிக்க வலியுறுத்தினார். மாநகராட்சி கமிஷனர் தினேஷ்குமார், ஆர்.டி.ஓ. ஷாலினி உடனிருந்தனர்.