/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சுய மருத்துவம் செய்த கல்லுாரி மாணவி பலி; 'யு டியூப்' சிகிச்சை பற்றி டாக்டர்கள் எச்சரிக்கை
/
சுய மருத்துவம் செய்த கல்லுாரி மாணவி பலி; 'யு டியூப்' சிகிச்சை பற்றி டாக்டர்கள் எச்சரிக்கை
சுய மருத்துவம் செய்த கல்லுாரி மாணவி பலி; 'யு டியூப்' சிகிச்சை பற்றி டாக்டர்கள் எச்சரிக்கை
சுய மருத்துவம் செய்த கல்லுாரி மாணவி பலி; 'யு டியூப்' சிகிச்சை பற்றி டாக்டர்கள் எச்சரிக்கை
ADDED : ஜன 21, 2026 08:48 AM

மதுரை: மதுரையில், உடல் பருமனை குறைக்க, 'யு டியூப்' பார்த்து சுய மருத்துவம் செய்த கல்லுாரி மாணவி உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்தார். முறையான வழிகாட்டுதலின்றி சுய மருத்துவம் செய்யக்கூடாது என, டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.
மதுரை, செல்லுார் மீனாம்பாள்புரம் வேல்முருகன் மகள் கலையரசி, 19; தனியார் கல்லுாரி முதலாமாண்டு -மாணவி. உடல் பருமனால் வருத்தப்பட்ட கலையரசி, உடல் கொழுப்பை குறைப்பது குறித்து, யு டியூப்பில் பார்த்தார்.
அதில், வெங்காரம் எனும் நாட்டு மருந்தை உட்கொண்டால், உடல் பருமன் குறையும் என, தெரிவிக்கப்பட்டிருந்தது. இதை நம்பியவர், அதை பயன்படுத்தி உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்தார்.
வேல்முருகன் கூறியதாவது:
என் மகள் உடல் பருமனாக இருப்பதாக கவலையில் இருந்தார். யு டியூப் பார்த்து வெங்காரம் வாங்கி சாப்பிட்ட போது, 'மருத்துவர்கள் ஆலோசனை இல்லாமல் சாப்பிட வேண்டாம்' என, தடுத்தேன். ஆனாலும், உடலை குறைக்க சாப்பிட்டார்.
சிறிது நேரத்திலேயே வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டது.
மருத்துவமனையில் அனுமதித்தோம். மாலையில் வயிறு வலி ஏற்பட்டு, வாந்தி எடுத்ததால் மருத்துவமனையில் காண்பித்து வீட்டுக்கு வந்தோம். இரவு உளறி பேச தொடங்கினார். அழுதபடி, மீண்டும் வாந்தி எடுத்தார். அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது, மகள் இறந்துவிட்டதாக டாக்டர்கள் கூறினர்.
இவ்வாறு அவர் கூறினார்.
சிவகங்கை டாக்டர் பரூக் அப்துல்லா கூறியதாவது:
யு டியூப்பில் வெங்காரம் சமைத்து தினமும் சாப்பிட்டு வந்தால், வாரம் 2 கிலோ எடை குறையும் என, வீடியோ உள்ளது.
பொதுவாக சித்த மருத்துவத்தில் வெங்காரத்தை சிறுநீர் பாதை தொற்று, இரைப்பை புண், தோல் நோய் சிகிச்சைக்கு சித்த மருத்துவர்கள் உபயோகிக்கின்றனர்.
சித்த மருத்துவம் முறையாக பயின்று, பட்டம் பெற்ற மருத்துவர்களுக்கு தெரியும். வெங்காரத்தை அப்படியே மருந்தாக உபயோகிக்க முடியாது.
மாணவி வெங்காரத்தை சாப்பிட்டதால் நஞ்சுத்தன்மை உண்டாகி, கடும் வயிற்றுப்போக்கு, குடல் இரைப்பை புண், அதனால் ஏற்பட்ட ரத்தப்போக்கு, சிறுநீரக செயலிழப்பால் இறந்திருக்க வேண்டும்.
உடல் எடை குறைப்புக்கு மாவுச்சத்து, கலோரி அளவுகளை குறைக்க வேண்டும். இனிப்பு சுவையை சாப்பிட கூடாது.
புரதம், ஆரோக்கிய கொழுப்பை சேர்க்க வேண்டும். நடைப்பயிற்சி, நல்ல உறக்கம் அவசியம். இவற்றால் உடல் எடை குறையும். யு டியூப் பார்த்து, சுய மருத்துவம் செய்யக்கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.

