ADDED : அக் 01, 2025 07:17 AM

சோழவந்தான் : சோழவந்தான் அருகே திருவேடகம் காலனியில் கால்வாயில் தேங்கும் கழிவு நீரை அகற்ற வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தியுள்ளனர்.
அப்பகுதி முத்துக்குமார் கூறியதாவது: விவசாய நிலங்களுக்கான பாசன கால்வாய் காலனி வழியே செல்கிறது. வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் கால்வாயில் சென்று இக்கால்வாயில் கலக்கிறது. கால்வாய் துார்வாரப்படாமலும் ஆக்கிரமிப்பாலும் மறைந்துள்ளது. இதனால் தண்ணீர் செல்ல முடியாமல் தேங்கி நிற்கிறது.
அதிகாரிகள், எம்.எல்.ஏ., வரும்போது மட்டும் கழிவுநீர் இயந்திரத்தின் மூலம் அகற்றப்படுகிறது. தேங்கும் கழிவு நீரை சுற்றி ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. சுற்றிலும் தடுப்புகள் இல்லாத நிலையில் குழந்தைகள் விழுந்து விபரீதம் விளையவும், துர்நாற்றம் வீசி நோய் பரவவும் அபாயம் உள்ளது.
மழைக்காலங்களில் வீடுகள் தண்ணீரில் மிதக்கின்றன. கழிவு நீரை அகற்றுவது மட்டுமின்றி, நிரந்தரமாக புதிய சாக்கடை கால்வாய் அமைக்க ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.