/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சக்சஸ்: மதுரையில் குற்றவழக்குகள் குறைந்தது
/
சக்சஸ்: மதுரையில் குற்றவழக்குகள் குறைந்தது
UPDATED : ஜன 01, 2026 06:11 AM
ADDED : ஜன 01, 2026 05:43 AM

மதுரை: 'மதுரை நகரில் 2025ல் 87 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். போக்குவரத்து விதிகளை மீறியதாக 5.7 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது' என போலீஸ் கமிஷனர் லோகநாதன் தெரிவித்தார். அவர் கூறியதாவது: 2025ம் ஆண்டில் வழிப்பறி, கொடுங்குற்றங்கள், போதை பொருட்கள் விற்பனையில் ஈடுபட்ட 87 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். தொடர் கண்காணிப்பு, சட்டம் ஒழுங்கு பராமரிப்பு காரணங்களால் 2024ம் ஆண்டை விட 2025ல் 43 சதவீதம் காய வழக்குகள் குறைந்துள்ளது. மேலும், கொலை முயற்சி வழக்குகள் 58 சதவீதம் குறைந்துள்ளது.
பல ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து 'பிடிவாரன்ட்' பிறப்பிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்மூலம் நிலுவையில் இருந்த வழக்குகளின் எண்ணிக்கை குறைந்தது.
11 வழக்குகளில் தொடர்புடைய 25 ரவுடிகளுக்கு 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை பெற்றுத்தரப்பட்டது. திருட்டு குற்ற வழக்குகளில் தொடர்புடைய சொத்துக்களில் ரூ.3 கோடியே 93 லட்சத்து 75 ஆயிரத்து 793 மதிப்புள்ள சொத்துக்கள் மீட்கப்பட்டு, உரியவர்களிடம் நீதிமன்றம் மூலம் ஒப்படைக்கப் பட்டது.
வழிப்பறி வழக்குகள் 2024ம் ஆண்டைவிட 2025ல் 74 சதவீதம் குறைந்துள்ளது. காணாமல் போன ரூ.ஒரு கோடியே 69 லட்சதது 80 ஆயிரம் மதிப்புள்ள 1,132 அலைபேசிகள் கண்டுபிடிக்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
வாகன விபத்துகள், வாகன விபத்தால் ஏற்பட்ட இறப்புகளும் வெகுவாக குறைந்துள்ளன. போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 5 லட்சத்து 7 ஆயிரத்து 263 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்றார்.

