ADDED : மார் 28, 2026 04:06 AM
மதுரை: பழனி கோவில் நிதியில், கட்டுமான பணி மேற்கொள்ள உயர் நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்துள்ளது.
சென்னை வினோத் ராகவேந்திரன் தாக்கல் செய்த பொதுநல மனுவில், 'பழனி தண்டாயுதபாணி கோவிலுக்கு சொந்தமான, 162.50 கோடியில் பல்வேறு கட்டுமான பணி மேற்கொள்ள அறநிலையத்துறை ஜன., 2 மற்றும் பிப்., 27ல் டெண்டர் வெளியிட்டது.
'இதில், பிரசாதம் தயாரிப்பு மையம் புதுப்பித்தல், பக்தர்கள் தங்கும் விடுதி, பழனியாண்டவர் பெண்கள் கலை அறிவியல் கல்லுாரி கட்டுமானம் உள்ளிட்டவை அடங்கும்.
'மேம்பாட்டுப் பணி எனும் போர்வையில், தேவையற்ற நோக்கங்களுக்காக கோவில் நிதியை திசைதிருப்ப முயற்சி நடக்கிறது. எவ்வித அவசர சூழலும் இல்லாத நிலையில், குறுகிய கால இடைவெளிக்குள் டெண்டர் வெளியானது.
'கோவில் நிதியை மேம்பாட்டு பணிக்கு பயன்படுத்துவது அறநிலையத்துறை சட்டம், விதிகளுக்கு முரணானது' என, குறிப்பிட்டார்.
நீதிபதிகள் என்.சதீஷ்குமார், எம்.ஜோதிராமன் அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் சுரேஷ் ஆஜரானார். கோவில் தரப்பு, 'டெண்டர் ஒதுக்கீடு இறுதி செய்யப்பட்டு, ஒப்பந்த பணி மேற்கொள்வதற்கான உத்தரவு வழங்கப்பட்டுள்ளது' என, தெரிவித்தது.
நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவி ல், 'இவ்விவகாரத்தில் தற்போதைய நிலை தொடர வேண்டும். கட்டுமான பணி எதுவும் மேற்கொள்ளக்கூடாது.
'பழனி கோவில் கிரி வீதி ஆக்கிரமிப்பு அகற்றுவதை கண்காணிக்க, சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதி பதி வி.பாரதிதாசனை இந்நீதிமன்றம் நியமித்தது.
'ஆய்வு செய்து ஜூன் 8ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என, உத்தரவிட்டனர்.
