/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஊதியத்தை உயர்த்தாத கூட்டுறவுத்துறை
/
ஊதியத்தை உயர்த்தாத கூட்டுறவுத்துறை
ADDED : மார் 05, 2026 06:55 AM
மதுரை: நகர கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க ஊழியர்களுக்கு மூன்றாண்டுகளாக ஊதியம் உயர்த்தவில்லை என மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர் சங்க (டாக்பியா) சங்க பொதுச்செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
கூட்டுறவுத் துறையின் கீழ் உள்ள தொடக்கக்கூட்டுறவு, நகரக்கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு புதிய ஊதியம் அனுமதிக்கப்பட்டு பதிவாளர் நந்தகுமார் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் புதிய ஊதியம் நிர்ணயிப்பதற்கு நிபந்தனை விதித்துள்ளதால் 40 சதவீத பணியாளர்கள் புதிய ஊதியம் பெற முடியவில்லை.
பணியாளர்களின் வருங்கால வைப்பு நிதி, பணிக்கொடையை மத்திய வங்கியில் கணக்கு வைக்காத சங்கங்களுக்கு புதிய ஊதியம் வழங்க அனுமதியில்லை என சுற்றறிக்கையில் உள்ளது. சங்கமோ, வங்கியோ தொடர்ந்து நஷ்டத்தில் இருந்தால் புதிய ஊதியம் வழங்க மறுப்பது, முறைகேடு, மோசடி நடந்த சங்கங்களில் பிரச்னைக்கு அப்பாற்பட்ட பணியாளர்களுக்கு ஊதியம் வழங்க மறுப்பது நியாயமில்லை.
ஏற்கனவே 2018, 2023 ஆண்டு ஊதிய ஒப்பந்தம் செய்யாத சங்க பணியாளர்களுக்கு ஊதிய அனுமதி மறுக்கப்படுகிறது.
செயலாளர், உதவி செயலாளர் பதவிகள், பொது பதவி தரத்தில் இருக்கிறது. எனவே புதிய ஊதியத்திற்கு துணைப் பதிவாளர் அனுமதி பெற்ற பின் ஆண்டு ஊதிய உயர்வுக்காக இணைப்பதிவாளர் அனுமதிக்கு அனுப்புவதால் காலதாமதம் ஏற்படுகிறது. தணிக்கை முடிக்கவில்லை என்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மூன்றாண்டுகள் ஆகியும் புதிய ஊதியம் பெற முடியவில்லை.
பதிவாளரை சந்தித்த போது அனைவருக்கும் 10 சதவீத ஊதிய உயர்வு அனுமதிக்கப்படும் என்று உறுதியளித்தும் இதுவரை நடைமுறைக்கு வரவில்லை. மார்ச் 15 க்குள் அனைத்து பணியாளர்களுக்கும் புதிய ஊதியம் வழங்காவிட்டால் மார்ச் 16 ல் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகங்களில் முற்றுகை போராட்டம் மேற்கொள்வோம் என்றார்.

