ADDED : மே 07, 2025 01:54 AM
அவனியாபுரம்:மதுரை அவனியாபுரம் கல்யாண சுந்தரேஸ்வரர் கோயிலில் பால மீனாம்பிகை அம்பாளுக்கு பட்டாபிஷேகம் நடந்தது.
கோயிலில் ஏப். 30ல் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. தினம் ஒரு வாகனத்தில் கல்யாண சுந்தரேஸ்வரர், பிரியாவிடை, பால மீனாம்பிகை அம்பாள் எழுந்தருளி வீதி உலா நிகழ்ச்சி நடக்கிறது.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று திக்கு விஜயம் நிகழ்ச்சியில் பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு, மே 8 காலை 8:35 முதல் 8:59 மணிக்குள் கல்யாண சுந்தரேஸ்வரர், பாலமீனாம்பிகை அம்பாள் திருக்கல்யாணம் நடக்கிறது.
அதற்கு முன் நிகழ்ச்சியாக நேற்று பட்டாபிஷேகம் நடந்தது. கோயில் மண்டபத்தில் பால மீனாம்பிகை அம்பாள் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளினார். யாக பூஜை, தீபாராதனை முடிந்து அம்பாளுக்கு கிரீடம் சூட்டப்பட்டு, கரங்களில் செங்கோல் சாத்துப்படிசெய்து பட்டாபிஷேகம் நடந்தது.