/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
2 வயது பெண் குழந்தையை கொன்று வீசிய தம்பதி கைது
/
2 வயது பெண் குழந்தையை கொன்று வீசிய தம்பதி கைது
ADDED : டிச 06, 2025 02:08 AM

திருமங்கலம்: திருமங்கலம் அருகே 2 வயது பெண் குழந்தையை, தந்தையே கழுத்தை நெரித்து கொலை செய்து காட்டு பகுதியில் வீசிய கொடூரம் நடந்துள்ளது.
தென்காசி மாவட்டத்தை சேர்ந்த கண்ணன், 22, திருமங்கலம் அருகே சொரிக்காம்பட்டியில், திருப்பரங்குன்றம் சந்திரன் என்பவரின் கோழிப்பண்ணையில் வேலை செய்து வந்தார்.
இவர், நான்கு மாதங்களுக்கு முன் கேரள மாநிலம், புனலுாரைச் சேர்ந்த கலாசூர்யா, 26, என்பவரை திருமணம் செய்தார்.
கலா சூர்யாவுக்கு ஏற்கனவே இரண்டு பேருடன் திருமணம் நடந்த நிலையில், 2வது கணவர் அச்சு மூலம் பிறந்த 2 வயது பெண் குழந்தையும் இருந்துள்ளது.
இரண்டு கணவர்களையும் பிரிந்து வாழ்ந்த கலாசூர்யா, மூன்றாவதாக கண்ணனை திருமணம் செய்துள்ளார்.
இருபது நாட்களுக்கு முன் கலாசூர்யா கடைக்கு சென்றபோது, தன்னிடமிருந்த குழந்தையை கழுத்தை நெரித்து கண்ணன் கொலை செய்துள்ளார்.
கடைக்கு சென்று திரும்பிய கலா சூர்யா, விழி பிதுங்கிய நிலையில் குழந்தை இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். கண்ணனிடம் கேட்டபோது, 'நம் சந்தோஷத்திற்கு இடையூறாக இருப்பதால் கொன்று விட்டேன்' என, கூறியுள்ளார்.
பின், இருவரும் சேர்ந்து குழந்தை உடலை அருகில் இருந்த காட்டு பகுதியில் வீசியுள்ளனர்.
அதன் பின், கலாசூர்யா கேரளா சென்றுள்ளார். அவரிடம் குழந்தை குறித்து கலாசூர்யாவின் தாய் சந்தியா கேட்டபோது, அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார்.
சந்தேகமடைந்த சந்தியா, குழந்தை குறித்து விசாரிக்கும்படி, கேரள போலீசில் புகார் அளித்தார்.
விசாரணையில், குழந்தையை கொன்று காட்டுப்பகுதியில் வீசியது தெரிந்தது. செக்கானுாரணி போலீசார் கண்ணன், கலாசூர்யாவை கைது செய்தனர். காட்டுப்பகுதியில் கிடந்த குழந்தையின் எலும்புக்கூடை மீட்டு விசாரிக்கின்றனர்.

