/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
காஷ்மீரில் இருந்து மதுரை திரும்பிய தம்பதி
/
காஷ்மீரில் இருந்து மதுரை திரும்பிய தம்பதி
ADDED : ஏப் 26, 2025 04:22 AM

அவனியாபுரம் : ஜம்மு காஷ்மீர் சுற்றுலா சென்ற மதுரை திருநகரைச் சேர்ந்த பாலசந்தர் - கஸ்துாரி தம்பதியை மதுரை விமான நிலையத்தில் கலெக்டர் சங்கீதா வரவேற்றார்.
மதுரை கே.கே. நகரைச் சேர்ந்தவர் பாலச்சந்தர். இவரது மனைவி கஸ்துாரி. இவர்கள் தமிழ்நாடு மோட்டார் வாகன உதிரிபாக வியாபாரிகள் சங்கம் சார்பில் சுற்றுலா பயணியாக காஷ்மீர் சென்றனர். சில நாட்களுக்கு முன் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். அங்கிருந்து சில கி.மீ., துாரமே தள்ளி இருந்த இவர்களுக்கு துப்பாக்கிச் சூடு குறித்து தெரியவந்தது. இதனை கேள்விப்பட்ட பாலசந்தருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது.
அவர் 9 கி.மீ., தொலைவில் இருந்த ஆனந்தநாக்கில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்குப் பின் பாலசந்தர் - கஸ்துாரி தம்பதியர் நேற்று விமான மூலம் மதுரை வந்தனர்.
அவர்களை கலெக்டர் சங்கீதா பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் திருமங்கலம் ஆர்.டி.ஓ., சிவஜோதி, தாசில்தார் கோபி உட்பட அதிகாரிகள் உடனிருந்தனர். சம்பவம் குறித்து கேட்டபோது, 'சிகிச்சையில் இருந்ததால் தன்னால் பேச முடியவில்லை' என சைகை மூலம் தெரிவித்தார்.
தமிழ்நாடு ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் சங்க தலைவர் பாலசுப்பிரமணியன் கூறுகையில், 'பயங்கரவாதிகளின் தாக்குதல் அதிர்ச்சி அளிக்கிறது. நாங்கள் தமிழகம் திரும்ப மத்திய, மாநில அரசுகள் ஹெல்ப்லைன் ஏற்படுத்தி ஏற்பாடு செய்தன. புதுக்கோட்டை மாவட்ட துணை கலெக்டர் சம்பவ இடத்தில் எங்களுக்கு நேரடியாக உதவி செய்தார். நமது ராணுவ வீரர்கள் உழைப்பு எங்களை மெய்சிலிர்க்க வைக்கிறது' என்றார்.

