ADDED : மார் 20, 2024 06:22 AM

மதுரை : மதுரையில் தேர்தல் கண்காணிப்பு குழுவினரால் நேற்றும் ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட பட்டாசு, பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
மதுரை மாவட்டத்தில் தேர்தல் கண்காணிப்பு குழுவினர் கடந்த 3 நாட்களாக தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். 2 நாட்களுக்கு முன் பெருங்குடியில் ரூ.18 கோடி மதிப்பிலான தங்க, வைர நகைகள் பிடிபட்டன. நேற்று முன்தினம் நத்தம் ரோடு கடவூர் பகுதியில் ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட பட்டாசு, பணம் பறிமுதலானது.
நேற்றும் இதுபோல பட்டாசு, பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மதுரை கிழக்கு தொகுதி பாண்டி கோயில் பறக்கும்படையினர் கண்காணிப்பில் இருந்தபோது அவ்வழியாக வந்த வேனை சோதனையிட்டனர். அதில் ரூ.2 லட்சம் மதிப்புள்ள பட்டாசு பெட்டிகள் இருந்தன. அவற்றுக்கு ஆவணங்களை சமர்ப்பிக்காததால் பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.
இதேபோல ஊமச்சிக்குளம் - அலங்காநல்லுார் ரோட்டில் தவசிப்புதுார் பகுதியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், எஸ்.ஐ., பிச்சைபாண்டியன், ஏட்டுகள் சுரேஷ்குமார், கீதா ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அவ்வழியாக சுபாஷ்சந்திரன் 64, என்பவர் டூவீலரில் வேகமாக வந்தார். அவரை சோதனையிட்டதில் ரூ.1.54 லட்சம் வைத்திருந்தார். அதற்கான ஆவணங்களை கேட்டபோது, பத்திர பதிவுக்காக என்றும், விவசாய பணிக்காக கொண்டு செல்வதாகவும் முரணாக பதிலளித்ததால் ஆவணங்கள் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்தனர். ஆவணத்தை சமர்ப்பித்தால் உடனே பணத்தை விடுவித்துவிடுவதாக தெரிவித்தனர்.

