‛'பயிர்க்கடன்களை நிபந்தனையின்றி தள்ளுபடி செய்ய வேண்டும்'
‛'பயிர்க்கடன்களை நிபந்தனையின்றி தள்ளுபடி செய்ய வேண்டும்'
ADDED : மே 13, 2026 03:23 AM
மதுரை: விவசாயிகளின் பயிர்க்கடன்களை நிபந்தனையின்றி முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என முதல்வர் விஜய்க்கு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி கூறியதாவது:
ஐந்தாண்டுகளாக விவசாயிகளுக்கு தி.மு.க., செய்த துரோகங்களை அம்பலப்படுத்தி தேர்தல் நேரத்தில் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.
விவசாயிகள் தி.மு.க.,வை புறக்கணித்தனர். தி.மு.க., பா.ஜ., வின் விவசாயிகள் விரோத நடவடிக்கைகளால், உற்பத்தியான பயிர்களுக்கு கட்டுப்படியான விலை கிடைக்கவில்லை. தொடர்ச்சியாக நஷ்டம் அடைந்து கடனை கட்ட முடியாமல் தவிக்கிறோம்.
த.வெ.க., தேர்தல் அறிக்கையில் ஐந்து ஏக்கருக்கு குறைவாக உள்ள விவசாயிகளுக்கு முழுமையாக பயிர்க்கடன் தள்ளுபடியும், ஐந்து ஏக்கருக்கு மேலே உள்ள விவசாயிகளுக்கு 50 சதவீத தள்ளுபடியும் வழங்கப்படும் என வாக்குறுதி அளித்தது.
நஷ்டத்தைப் பொறுத்தவரை குறு, சிறு விவசாயிகளுக்கு சிறியளவில் நஷ்டம், பெரிய விவசாயிகளுக்கு பெரியளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதே தவிர பெரிய விவசாயிகள் மட்டும் லாபத்தை ஈட்டவில்லை. தற்போது பயிரிடும் பருவம் தொடங்கியுள்ளது. பயிர்க்கடன்கள் கட்டப்பட்டு மீண்டும் புதுக்கடன் பெற வேண்டிய நிலையில் கடனை கட்ட முடியாமல் வட்டி செலுத்த வேண்டிய சூழ்நிலையும் உருவாகியுள்ளது. தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களும் தேர்தல் நேரம் என்று கூட பார்க்காமல் விவசாயிகளை நெருக்கடிக்கு ஆளாக்கினர்.
எனவே விவசாயிகளின் சிரமத்தை உணர்ந்து விவசாயிகளின் அனைத்து பயிர்க்கடன்களையும் நிபந்தனை இன்றி தள்ளுபடி செய்து அதற்கான நிதியை ஒதுக்க வேண்டும் என்றார்.
