ADDED : ஏப் 27, 2026 11:34 PM
மதுரை: பயிர் அறுவடைக்கு பின் நிலத்தில் எஞ்சியுள்ள தாள், தண்டு, இலைகளை உரமாக பயன்படுத்தி மண்வளம் காப்பதே பயிர்க்கழிவு மேலாண்மை என வேளாண் இணை இயக்குநர் முருகேசன் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
நெல், கரும்பு, மக்காச்சோள தாள்களை அறுவடைக்கு பின் 'ரோட்டோவேட்டர்' இயந்திரம் மூலம் மண்ணுக்குள் மடக்கி உழுதால் இயற்கை உரமாகிவிடும். பயிர்க்கழிவுகளை ஓரிடத்தில் குவித்து சாணம், நுண்ணுயிர் கூட்டுக்கலவை சேர்த்து இயற்கை உரம் தயாரிக்கலாம். மண்ணின் மேற்பரப்பில் பயிர்க்கழிவுகளை பரப்பி மண்ணின் ஈரப்பதத்தை தக்கவைக்கலாம். இது களைகள் வளர்வதை கட்டுப்படுத்தும். வைக்கோல், சோளத்தட்டைகளை கால்நடைகளுக்கு உலர்தீவனமாக கொடுக்கலாம்.
இயந்திரத்தைப் பயன்படுத்தினால் வைக்கோல், கரும்புத் தோகையை துண்டு துண்டாக வெட்டி வயல் முழுவதும் பரப்பிவிடும். தாள்களை அகற்றாமல் அதன் மேல் நேரடியாக விதைக்கலாம். பயிர்க்கழிவுகளை எரிப்பதால் நிலத்தில் உள்ள நன்மை செய்யும் நுண்ணுயிர்கள், மண்புழுக்கள் இறக்கின்றன. நிலத்தின் தழைச்சத்து, மணிச்சத்துகள் புகையாக வெளியேறி வீணாகும். சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படும் என்றார்.
