ADDED : மே 17, 2026 03:39 AM

திருமங்கலம்: கள்ளிக்குடி தாலுகா கல்லணையில் தனியார் கல் குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. அந்தப் பகுதியில் பெய்யும் மழை நீர் ஆறு மற்றும் கண்மாய்க்கு செல்லும் பாதையில் கரைகளை தனியார் கல்குவாரி நிறுவனம் சமீபத்தில் உயர்த்தியது.
இந்நிலையில் சில நாட்களாக கள்ளிக்குடி பகுதியில் தொடர்ந்து மழை பெய்தது. இங்கு பெய்த மழை நீர் வடிய வடிகால் வசதி இல்லாததாலும், நீர்வழிப் பாதைகள் மறைக்கப்பட்டதாலும் தண்ணீர் வெளியேற வழி இன்றி பத்து நாட்களுக்கும் மேலாக சாகுபடி நிலங்களுக்குள் புகுந்தன. இதனால் பருத்தி பயிர் தண்ணீரில் மூழ்கியுள்ளது.
மழை பெய்தால் கொண்டாட வேண்டிய விவசாயிகள், தண்ணீர் வெளியேறாததால் வேதனைக்கு உள்ளாகியுள்ளனர். மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து விதிமுறை மீறிய குவாரிகளை கட்டுப்படுத்தவும், வடிகால் கால்வாய்களை சீரமைக்கவும் வேண்டும் என விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.
