ADDED : மார் 04, 2026 06:17 AM
எழுமலை: எழுமலை பகுதியில் காகங்கள் உயிரிழப்பு சம்பவம் தொடர்கிறது. மயக்க நிலைக்குச் செல்லும் காகங்கள் தொடர்ந்து உயிரிழப்பது குறித்து கால்நடைத் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
சில தினங்களுக்கு முன்பு எழுமலை அருகே மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரம் உள்ள நாகம நாயக்கன்பட்டியில் 10க்கும் மேற்பட்ட காகங்கள், கோழிகள் உயிரிழந்தது குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், நேற்று எழுமலை போலீஸ் ஸ்டேஷன் அருகே உள்ள பகுதியில் நிற்கவும், பறக்க முடியாமல் ஓரமாக நின்றிருந்த காகம் ஒன்று மயக்க நிலைக்குச் சென்று உயிரிழந்தது.
எழுமலை கால்நடை மருத்துவர் தங்கப்பாண்டி தலைமையிலான குழுவினர் இறந்த காகத்தை எடுத்துச் சென்று, பறவைக்காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை கண்டறிய பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்தப்பகுதியில் உள்ள கிராமங்களில் தொடர் ஆய்வுப்பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.
தமிழ்நாடு, கேரள மாநிலங்களில் காகங்கள் அடுத்தடுத்து உயிரிழக்கின்றன. இதுபற்றி ஆய்வு செய்த சுகாதாரத்துறை, கால்நடைத் துறையினர் பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
