ADDED : பிப் 07, 2024 07:20 AM
திருமங்கலம்: திருமங்கலம் அரசு மருத்துவமனையில் மின்தடையால் நோயாளிகள் அவதிக்குள்ளாகினர்.
மின்வாரியம் முன்னறிவிப்பின்றி மின்தடை செய்வதால் இம்மருத்துவமனையின் ஏதாவது ஒரு பகுதியில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. நேற்று எக்ஸ்ரே பிரிவில் 10க்கும் மேற்பட்ட நோயாளிகள் காத்திருந்தனர். அப்போது மின்தடை ஏற்பட்டதால் எக்ஸ்ரே எடுக்க முடியாமல் தவித்தனர்.
ஜெனரேட்டரை இயக்குமாறு அவர்கள் கூற, உடனடியாக இயக்க முடியாது என ஊழியர்கள் தெரிவித்தனர். 25 நிமிடங்கள் கழித்து ஜெனரேட்டரை இயக்கி எக்ஸ்ரே எடுத்து அனுப்பினர். இதனால் நோயாளிகள் ஒரு மணி நேரத்திற்கும் மேல் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டது.
தவிர்க்க முடியாத காரணத்தால் மின்தடை ஏற்படும் பட்சத்தில் முன்னரே மருத்துவமனைக்கு மின்வாரியம் தகவல் தெரிவிக்க வேண்டும். மின்தடை ஏற்பட்டவுடன் தானாக ஜெனரேட்டர் இயங்கும் வசதி செய்யப்பட வேண்டும்.
