/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சாகுபடி பயிர்களை சூறையாடிய சூறாவளி
/
சாகுபடி பயிர்களை சூறையாடிய சூறாவளி
ADDED : ஏப் 14, 2025 05:34 AM

மேலுார்: சருகுவலையபட்டியில் பலத்த சூறாவளி காற்றுடன் பெய்த மழைக்கு வாழை, கரும்பு உள்ளிட்ட பயிர்கள் சாய்ந்ததால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.
மேலுார் சுற்றியுள்ள சருகுவலையபட்டி, நரசிங்கம்பட்டி பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. இதில் மரங்கள் முறிந்து விழுந்ததில் 10 க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் உடைந்து கிராமம் முழுவதும் இருளில் மூழ்கியது. மேலும் இப்பகுதியில் வாழை, கரும்பு, மிளகாய், முத்துச்சோளம் பயிரிட்ட விவசாயிகள் முருகேசன், தம்பிதுரை, ஆண்டிச்சாமி, ராஜாமணி, சின்ன கருப்பன் உள்ளிட்டோருக்கு பாதிப்பு ஏற்பட்டது.
விவசாயி முருகேசன் கூறியதாவது: ஏக்கருக்கு ரூ. 80 ஆயிரம் செலவு செய்த வாழை, ரூ. 70 ஆயிரம் செலவு செய்த கரும்பு உள்ளிட்ட பயிர்கள் காற்றுக்கு சாய்ந்தது. ஒரு மாதத்தில் வெட்ட வேண்டிய கரும்பு, வாழை சாய்ந்ததால் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. மேலும் கூட்டுறவு சங்கங்கள், தனிநபர்களிடம் வாங்கிய கடன்களை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வேளாண், வருவாய்த்துறையினர் ஆய்வு செய்து பயிர்களுக்கு நிவாரணம் வழங்குவதுடன், கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றார்.

