ADDED : பிப் 23, 2026 06:13 AM

சோழவந்தான்: சோழவந்தான் அருகே மேலக்கால் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் சேதமடைந்த தொட்டிப் பள்ளத்தால் விபத்து அபாயம் உள்ளது.
இங்கு கொட்டாரத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைந்துள்ளது. சுற்றுவட்டாரத்திலிருந்து கர்ப்பிணிகள், நோயாளிகள் சிகிச்சைக்காக வருகின்றனர். சுகாதார நிலைய வளாகத்தில்பயன்படுத்தாமல் கைவிடப்பட்ட 'செப்டிக் டேங்க்' நடைபாதைக்கு அருகே அமைந்துள்ளது. இதன் மேல் அமைக்கப்பட்ட 'கான்கிரீட்' மூடி சேதமடைந்து, நொறுங்கி எப்போது வேண்டுமானாலும் விழும் நிலையில் உள்ளது. பாதுகாப்பிற்காக முள்செடிகளை மேலே வைத்துள்ளனர். இருப்பினும் நடைபாதைக்கு அருகே தொட்டியைச் சுற்றிலும் செடிகள் முளைத்துள்ளதால் தொட்டி இருப்பதே தெரியவில்லை. இதனால் தவறுதலாக குழந்தைகள், முதியவர்கள் விழுந்து விபரீதம் ஏற்பட வாய்ப்புள்ளது. ஒன்றிய அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி யினர் வலியுறுத்துகின்றனர்.
