ADDED : ஏப் 06, 2026 11:00 PM

மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன், போலீஸ் காவலில் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில், குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட, இன்ஸ்பெக்டர் உட்பட ஒன்பது போலீசாருக்கும் மரண தண்டனை விதித்து, மதுரை மாவட்ட நீதிமன்றம் நேற்று அதிரடியாக தீர்ப்பளித்தது. மேலும், 1 கோடியே 40 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அபராத தொகையை, பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.
துாத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் ஜெயராஜ், 63, மரக்கடை நடத்தினார். அவரது மகன் பென்னிக்ஸ், 31; அதே பகுதியில் மொபைல் போன் கடை நடத்தினார். கொரோனா ஊரடங்கு அமலில் இருந்த, 2020 ஜூன் 19 இரவு, 9:00 மணிக்கு, போலீசார் முருகன், முத்துராஜ் ஆகியோர் ரோந்து சென்றனர்.
ஊரடங்கு காலத்தில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்து கடையை திறந்து வைத்திருந்ததாக கூறி, கடையை மூடுமாறு ஜெயராஜ், பென்னிக்ஸிடம் போலீசார் கண்டித்தனர். அப்போது, இரு தரப்பிலும் வாக்குவாதம் ஏற்பட்டது.
ஆத்திரமடைந்த போலீசார், தந்தை, மகனை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச்சென்றனர். விசாரணையில், ஜெயராஜ், பென்னிக்ஸ் கடுமையாக தாக்கப்பட்டனர். பின், கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.
கடந்த, 2020 ஜூன் 22ல் பென்னிக்ஸ், கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். காயங்களுடன் இருந்த ஜெயராஜும், ஜூன் 23ல் இறந்தார். இவ்வழக்கு விசாரணையை, தமிழக அரசு சி.பி.ஐ.,க்கு மாற்றியது.
சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்.ஐ.க்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், ஏட்டுகள் முருகன், சாமத்துரை, போலீஸ்காரர்கள் முத்துராஜா, செல்லத்துரை, தாமஸ் பிரான்சிஸ், வெயில்முத்து மீது கொலை, சட்டவிரோதமாக தடுத்து வைத்தல், ஆதாரங்களை மறைத்தல், பொய் தகவல் அளித்தல், பொய் சாட்சியங்கள் அல்லது ஆதாரங்களை உருவாக்குதல், துன்புறுத்தும் நோக்கில் பொய் குற்றச்சாட்டுக்களை சுமத்துதல், கூட்டுச்சதி உள்ளிட்ட பிரிவுகளில் சி.பி.ஐ., வழக்கு பதிந்து விசாரித்தது.
தென்மாவட்டங்களில், குற்றவியல் வழக்கை சி.பி.ஐ., பதிவு செய்யும் பட்சத்தில், அதை விசாரிக்க, மதுரை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, கடந்த மார்ச் 23ல் அந்நீதிமன்ற நீதிபதி முத்துக்குமரன் பிறப்பித்த உத்தரவில், 'ஜெயராஜ், பென்னிக்ஸ் மீது பொய் வழக்கு பதிந்துள்ளனர். சட்டவிரோதமாக காவலில் வைத்து தாக்கியுள்ளனர். இருவரும் கொலை செய்யப்பட்டதில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்ளிட்ட ஒன்பது போலீசாரும் குற்றவாளிகள். அவர்களுக்கு தண்டனை விபரம் பின்னர் அறிவிக்கப்படும்' என, தீர்ப்பளித்தார்.
ஏப்., 2ல் விசாரணையின் போது, சி.பி.ஐ., தரப்பு வழக்கறிஞர் விஜயன், 'அரிதிலும் அரிதான வழக்குகளில் மட்டுமே துாக்கு தண்டனை விதிக்கப்படுகிறது. அந்த வரம்பின் கீழ் இவ்வழக்கு வருகிறது. குற்றவாளிகளுக்கு துாக்கு தண்டனை விதிக்க வேண்டும்' என்றார்.
குற்றவாளிகள் தரப்பு, 'திட்டமிட்டு சம்பவம் நடக்கவில்லை. ஸ்டேஷனுக்கு பென்னிக்ஸ் வந்த பின் தான் பிரச்னை உருவானது. துாக்கு தண்டனை விதிக்க வேண்டிய அவசியமில்லை. அனைவருக்கும் குடும்பம் உள்ளது. அவர்களை பராமரிக்க வேண்டியுள்ளது. மனம் திருந்துவதற்கான வாய்ப்பு வழங்க வேண்டும். குறைந்தபட்ச தண்டனை விதிக்க வேண்டும்' என்றனர்.
நீதிபதி, 'ஏப்., 6ல் தண்டனை அறிவிக்கப்படும்' என்றார்.
இந்நிலையில், நீதிபதி முத்துக்குமரன் முன்னிலையில், ஸ்ரீதர் உள்ளிட்ட ஒன்பது போலீசாரும் நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர்.
அப்போது, நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
குற்றத்தின் நோக்கம், தன்மை, பாதிக்கப்பட்டவர்களின் நிலையை கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. ஜெயராஜ், பென்னிக்ஸ் மீது எவ்வித குற்ற வழக்கும் நிலுவையில் இல்லை. கவுரவமாக, கண்ணியமிக்க வாழ்க்கை வாழ்ந்துள்ளனர்.
நிராயுதபாணிகளான இருவரையும் சட்டவிரோதமாக காவலில் தடுத்து வைத்து, நிர்வாணப்படுத்தி, இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்ளிட்ட ஒன்பது பேரும், ஈவு, இரக்கமின்றி சித்ரவதை செய்துள்ளனர். இது வேலியே பயிரை மேய்வது போல் உள்ளது.
அரிதிலும் அரிதான வழக்குகளில் மட்டுமே துாக்கு தண்டனை விதிக்க வழிவகை உள்ளது என்பதில் சந்தேகம் இல்லை. சட்டம், மக்களை பாதுகாக்க வேண்டிய அதிகாரத்தில் உள்ள போலீசாரே குற்றம் புரிந்துள்ளனர்.
இருவரின் உடலில் இருந்த காயங்கள், பிரேத பரிசோதனை வீடியோ பதிவுகளை பார்க்கையில் மனம் வெதும்புகிறது. இது குற்றவாளிகளின் கொடூர மனநிலையை வெளிப்படுத்துகிறது.
போலீஸ் காவலில் உள்ளவர்களை எப்படி கையாள வேண்டும் என, உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம் வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது; அதை குற்றவாளிகள் பின்பற்றவில்லை.
மடப்புரம் கோவில் காவலாளியாக இருந்த அஜித்குமார், போலீஸ் காவலில் இறந்துள்ளார். இதுபோன்ற கொடிய நோய் மேலும் பரவக்கூடாது. சாத்தான்குளம் போலீசில் நடந்த சம்பவம் போல், எதிர்காலத்தில் நடக்காது என, உறுதியாக கூற முடியாது.
குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதிப்பது மட்டும் போதுமானதல்ல. கடும் தண்டனை விதித்தால் மட்டுமே, இதை கட்டுப்படுத்த முடியும். ஸ்ரீதர் உள்ளிட்ட ஒன்பது பேருக்கும், துாக்கு தண்டனை விதிக்கப்படுகிறது.
அவர்களுக்கு, 1 கோடியே, 40 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த தொகையை பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு வழங்க வேண்டும். அபராதத்தை செலுத்தாத பட்சத்தில், வருவாய் வசூல் சட்டப்படி வசூலிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு உத்தரவிட்டார்.
இதையடுத்து, ஸ்ரீதர் உள்ளிட்ட ஒன்பது போலீசாரும், மதுரை மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
