வழக்கு பதிய தாமதம் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை: உயர்நீதிமன்றம் உத்தரவு
வழக்கு பதிய தாமதம் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை: உயர்நீதிமன்றம் உத்தரவு
UPDATED : நவ 19, 2026 06:51 PM
ADDED : நவ 19, 2026 06:46 PM
மதுரை: ராமநாதபுரம் மாவட்டம் நகரத்தார்குறிச்சியில் கோயில் திருவிழா வழிபாடு தொடர்பான பிரச்னையில் வழக்கு பதிவு செய்வதில் தாமதம் ஏற்பட்டதற்கு அபிராமம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை மேற்கொள்ள அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. முத்துவிஜயபுரம் இருளாண்டி தாக்கல் செய்த பொதுநல மனு:
கமுதி அருகே நகரத்தார்குறிச்சியில் ஆக.29 ல் கோயில் திருவிழா நடந்தது. குறிப்பிட்ட பிரிவு மக்கள் வழிபடுவதற்காக பொது சாலை வழியாக சென்றனர். சிலர் வழிமறித்து கற்களை வீசி, ஜாதி அடிப்படையில் அவமதித்து இடையூறு செய்தனர். அபிராமம் போலீசில் புகார் அளித்தோம். பொது சாலையில் எவ்வித சட்டவிரோத தடையையும் ஏற்படுத்தக்கூடாது. ஜாதி பாகுபாடின்றி குறிப்பிட்ட பிரிவு மக்கள் அச்சாலையை பயன்படுத்துவதை உறுதி செய்ய நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.அமர்வு பிறப்பித்த உத்தரவு:மனுதாரர் செப்.2 ல் புகார் அளித்துள்ளார். செப். 21 ல் தான் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அன்றுதான் விசாரணை அதிகாரி நியமிக்கப்பட்டார். செப்.22 ல் விசாரணையை துவக்கினார். அவர் சம்பவ இடத்தில் இருந்த போலீஸ் அதிகாரிகளில் ஒருவர். விசாரணை நடத்துவதில் நடுநிலையுடன் செயல்படுவாரா என சந்தேகம் எழுகிறது. அவரை விசாரணை அதிகாரியாக நியமித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. அவர் மேற்கொண்ட விசாரணை ரத்து செய்யப்படுகிறது. செப்.2 முதல் செப்.21 வரை அபிராமம் போலீசில் பொறுப்பு அதிகாரியாக பணியாற்றிய இன்ஸ்பெக்டர் உடனடியாக வழக்கு பதிவு செய்ய தவறியுள்ளார். சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டருக்கு எதிராக துறைரீதியான நடவடிக்கையை எஸ்.பி.,மேற்கொள்ள வேண்டும். இன்ஸ்பெக்டருக்கு எதிரான நடவடிக்கை குறித்த அறிக்கையை 2 வாரங்களில் மதுரை ஐ.ஜி.,தாக்கல் செய்ய வேண்டும். சம்பவ இடத்தில் இல்லாத நடுநிலையான டி.எஸ்.பி., ஒருவரை விசாரணை அதிகாரியாக நியமிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டது.
