UPDATED : மே 08, 2026 03:45 PM
ADDED : மே 08, 2026 03:40 PM
திருநகர்: த.வெ.க., ஆட்சி அமைப்பதில் சிக்கல் நீடிக்கும் நிலையில் கவர்னரின் செயல்பாடுகளை கண்டித்து திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தெற்கு மாவட்ட தலைவர் உலகநாதன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் பாண்டியன், பிரபாகரன், சரவணபகவான், வித்யாபதி, விஜய் தீபன், சத்யன், கவுன்சிலர் சுவேதா, த.வெ.க., நிர்வாகிகள் பங்கேற்றனர்.
நிர்வாகிகள் பேசுகையில், '1996,1998ல் எங்களால்தான் தி.மு.க., வெற்றி பெற்றது. 1999ல் தி.மு.க., பா.ஜ., விடம் சென்றது. அதன் பின்பு நடந்த தேர்தல்களில் எங்கள் தயவால்தான் தி.மு.க., தொடர்ந்து வெற்றி பெற்றது. காங்., வளர்ந்து விடக்கூடாது, தொண்டர்கள் அதிகாரத்திற்கு வந்து விடக்கூடாது எனவும், காங்., கட்சியை அழித்து விட வேண்டும் என தி.மு.க, தலைமை செயல்பட்டது'' என்றனர்.
மாணவர்கள் போராட்டம் கலெக்டர் அலுவலகம் அருகே த.வெ.க., ஆதரவு அமைப்பான அனைத்து மாணவர் முன்னேற்ற அமைப்பினர் தலைவர் முனீஸ் தலைமையில் மறியலில் ஈடுபட்டனர். சிறிது நேரம் போக்குவரத்து பாதித்தது. போலீசார் சமரசம் செய்தனர். நிர்வாகிகள் கூறுகையில், ''த.வெ.க.,வை ஆட்சி அமைக்க கவர்னர் அழைக்க வேண்டும். இல்லையெனில் விஜய் ஆட்சி அமைக்கும் வரை தமிழகம் முழுவதும் போராட்டம் தொடரும்'' என்றனர்.
