/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மாநகராட்சி நகரமைப்புக் குழுவை முடக்கினாலும் மீண்டும் செயல்படுவதாக கூறி 'வசூல் மழை'
/
மாநகராட்சி நகரமைப்புக் குழுவை முடக்கினாலும் மீண்டும் செயல்படுவதாக கூறி 'வசூல் மழை'
மாநகராட்சி நகரமைப்புக் குழுவை முடக்கினாலும் மீண்டும் செயல்படுவதாக கூறி 'வசூல் மழை'
மாநகராட்சி நகரமைப்புக் குழுவை முடக்கினாலும் மீண்டும் செயல்படுவதாக கூறி 'வசூல் மழை'
ADDED : மே 07, 2025 02:00 AM

மாநகராட்சியில் கணக்கு, பொது சுகாதாரம், சுகாதாரம், கல்வி, நகரமைப்பு, வரிவிதிப்பு என பல நிலைக் குழுக்கள் உள்ளன. இதில் குழுத் தலைவர்கள், உறுப்பினர்களாக கவுன்சிலர்கள் உள்ளனர். நகரமைப்பு குழுத் தலைவராக தி.மு.க., நகர் துணை செயலாளர் மூவேந்திரன் இருந்தார். தற்போது 14 உறுப்பினர்கள் உள்ளனர். கட்டட வரைப்பட அனுமதி, லே அவுட்டுகளுக்கான உள்ளிட்ட அங்கீகாரம் வழங்க நகரமைப்பு குழு ஒப்புதல் அளிக்க வேண்டும். இதன் பின்னரே கவுன்சிலர்கள் கூட்டத்தில் தீர்மானமாக கொண்டு வரப்பெற்று ஒப்புதல் பெற முடியும்.
கமிஷனர் வழங்க வேண்டிய கட்டட நிறைவுச் சான்றிதழை நகரமைப்பு குழு வழங்கி மோசடி செய்ததாக கமிஷனராக மதுபாலன் இருந்தபோது புகார் எழுந்தது. இதுகுறித்து விசாரணை நடத்தி உறுதி செய்யப்பட்டதால் நகரமைப்பு குழு செயல்பாடு முடக்கப்பட்டது. இக்குழு ஒப்புதல் இல்லாமலே மாநகராட்சி நகரமைப்பு பிரிவு செயல்பட சிறப்பு அனுமதி வழங்கப்பட்டது. நகரமைப்பு குழு முறைகேடு தொடர்பான விசாரணை தற்போது நகராட்சி நிர்வாக இயக்குநரிடம் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், இக்குழு செயல்படுவதாகவும், கட்டட அனுமதி, லே அவுட்டுகளுக்கான அனுமதி நகரமைப்பு குழுவிடம் ஒப்புதல் பெற வேண்டும் எனவும் இக்குழுவில் உள்ள சிலர் மறைமுகமாக கட்டட உரிமையாளர்களை மிரட்டி வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது.
நகரமைப்பு குழு உறுப்பினர்கள் சிலர் கூறுகையில், நகராட்சி இயக்குநர் விசாரணை நடந்தாலும் குழுவை முடக்கி வைப்பதற்கான உத்தரவு ஏதும் இல்லை. இக்குழு செயல்பட்டால் நகரமைப்பு அதிகாரிகள் தன்னிச்சையாக செயல்பட முடியாது. திட்டமிட்டு குழுவை முடக்கி வைத்துள்ளனர். உறுப்பினர்கள் யாரும் எந்த வசூலிலும் ஈடுபடவில்லை என்றனர்.
கமிஷனர் சித்ரா கூறுகையில், நகரமைப்பு குழு மீதான விசாரணை நிலுவையில் உள்ளதால் தற்காலிகமாக முடக்கி வைக்கப்பட்டுள்ளது. விசாரணைக்கு பின் தான் முடிவு எடுக்க முடியும். வசூல் செய்வது குறித்து ஆதாரத்துடன் புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இம்முறைகேடு குறித்து நகராட்சி நிர்வாக இயக்குநர் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், உள்ளூர் ஆளுங்கட்சி நிர்வாகிகள் சிலர் 'இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டாம்' என அரசியல் ரீதியாக முட்டுக்கட்டை போடுவதால் முடிவின்றி இழுபறியாக உள்ளது. தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். நடவடிக்கை இழுபறியாவதால் நகரமைப்பு குழுவினருக்கும், நகரமைப்பு அதிகாரிகளுக்கும் மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. இது கவுன்சிலர்கள் கூட்டத்திலும் எதிரொலிக்கிறது. இதுபோன்ற சூழல் நிர்வாகத் தேக்கத்திற்கு வழிவகுக்கும். விரைவில் விசாரணையை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என மாநகராட்சி அலுவலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

