/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரையில் மாதிரி வேளாண் கிராமம் உருவாக்கம்
/
மதுரையில் மாதிரி வேளாண் கிராமம் உருவாக்கம்
ADDED : நவ 04, 2024 11:55 AM

வேளாண் சுற்றுலா தலங்களை மேம்படுத்தல், விவசாயத்தை முன்னேற் 'டிஸ்கவர் தமிழ்நாடு 2024' என்னும் திட்டத்தின் ஒரு பகுதியாக தனியார் அமைப்புகளுடன் இணைந்து வேளாண் சுற்றுலாவை, தமிழக சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மதுரையில் நடத்தியது.
இதற்காக, மதுரை செட்டிகுளம் கிரேஸ் கார்டனில் 3 ஏக்கர் பரப்பளவில் வேளாண் சுற்றுலா மாதிரி கிராமம் உருவாக்கப்பட்டுள்ளது. இதேபோல், கிரேஸ் கார்டன் மற்றும் டெர்னம் ஹோம்ஸ் இணைந்து, மதுரை காரியாபட்டி அருகில், 35 ஏக்கரில் வேளாண் கிராமம் உருவாக்கப்பட உள்ளது. இதற்கான ஒப்பந்தமும் நிகழ்வில் கையெழுத்தானது.
தமிழ்நாட்டில் மாதிரி வேளாண் கிராமங்களை அமைக்க உள்ள டெரனம் ஹோம்ஸ் ஆனந்த் ரவிச்சந்திரன், கிரேஸ் கார்டன் நிறுவனர் அருள் ஜேம்ஸ் எட்வின்தம்பு, தமிழ்நாடு சுற்றுலாத்துறை மேலாளர் ஜெனட், மதுரை மாவட்ட சுற்றுலா அலுவலர் பாலமுருகன் உள்பட பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
செப்டம்பர் 27ம் தேதி, 'உலக சுற்றுலா தினத்தை' முன்னிட்டு தொடங்கிய நிகழ்வு ஒரு மாதமாக நடந்து வருகிறது. நிகழ்வின் ஒரு பகுதியாக, 'இன்ஃப்ளுயன்சர்ஸ் ஆன் வீல்ஸ்' என்ற நிகழ்வுக்கும் தமிழ்நாடு சுற்றுலாத் துறை ஏற்பாடு செய்திருந்தது.
சமூக ஊடகங்களில் பிரபலமாக உள்ள பிரான்ஸ், நார்வே, இலங்கை, வங்கதேசம் உட்பட வெளிநாடு மற்றும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 20 சோசியல் மீடியா இன்ஃப்ளுயன்சர்ஸ் சிறப்பு விருந்தினர்களாக இந்நிகழ்வில் பங்கேற்றனர். இவர்கள் மூலமாக தமிழ்நாட்டு வேளாண் சுற்றுலா மற்றும் மற்ற சுற்றுலாத் தலங்களை வெளிநாட்டில் பிரபலப்படுத்தும் நோக்கில் இந்நிகழ்விற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்தக் குழுவினரை மாட்டு வண்டியில் அழைத்து வந்து, நிலத்தில் விதை பயிரிட்டு காண்பிக்கப்பட்டது.
மேலும் நிகழ்ச்சியில் கலைமாமணி கோவிந்தராஜ் கலைக்குழுவினரின் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்வில், மண்பாண்டங்கள், பனைகள் நேரடியாக தயாரித்தும் காட்டப்பட்டன. மேலும் இயற்கை நீர் குளியல், கயிறு இழுத்தல் உறியடிப்போட்டி உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.