சர்க்கரை நோயினால் ஏற்படும் வளர்ச்சிதை மாற்ற நினைவாற்றல்
சர்க்கரை நோயினால் ஏற்படும் வளர்ச்சிதை மாற்ற நினைவாற்றல்
ADDED : நவ 13, 2026 07:41 PM
உலக சர்க்கரை நோய் தினத்தை முன்னிட்டு வளர்ச்சிதை மாற்ற நினைவாற்றல் குறித்து பார்க்கலாம். சர்க்கரை நோய், நம் உடலில் ஏற்படும் பாதிப்பு மட்டுமல்ல. இன்று நாம் எடுக்கும் முடிவுகள், நம் எதிர்கால ஆரோக்கியத்தையும் தீர்மானிக்கிறது. இதைத்தான் மருத்துவ உலகில் வளர்ச்சிதை மாற்ற நினைவாற்றல் என அழைக்கிறோம்.
ஒருவருக்கு சர்க்கரை நோய் ஆரம்பித்த நாளிலிருந்தே ரத்த சர்க்கரையை கட்டுப்பாட்டில் வைத்திருந்தால், அதன் நன்மை பல ஆண்டுகளுக்கு தொடரும். கட்டுப்பாட்டில் வைக்க தவறினால், பின்னர் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தினாலும், ரத்த நாளங்கள், இதயம், சிறுநீரகம், கண்கள் மற்றும் நரம்புகளில் பாதிப்புகள் மோசமாவதை தடுக்க இயலாது. ஏற்கனவே ஏற்பட்ட சில பாதிப்புகள் முழுமையாக மறையாமல் இருக்கலாம். இதைத்தான் சர்க்கரை நோயின் நல்ல அல்லது தீய நினைவாற்றல் என்று கருதுகிறோம்.
செய்ய வேண்டியது என்ன
சர்க்கரை நோய் உள்ளதா என்பதை தெரிந்துகொள்ள அவ்வப்போது ரத்தப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். கண்டறியப்பட்டவுடன் சிகிச்சையை தாமதிக்காமல் தொடர வேண்டும். டாக்டர் பரிந்துரைக்கும் மருந்துகளை தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும். தினமும் குறைந்தது 30 நிமிடங்கள் நடைபயிற்சி செய்ய வேண்டும். அரிசி உணவின் அளவை கட்டுப்படுத்தி, காய்கறிகள், கீரைகள், புரத உணவுகளை அதிகம் சேர்க்க வேண்டும். உடல் எடை, ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும். எச்.பி.ஏ1.சி., பரிசோதனையை டாக்டரின் ஆலோசனைப்படி செய்து கொள்ள வேண்டும்.
சர்க்கரை நோயை கட்டுப்படுத்துவது, இன்றைய ரத்த சர்க்கரை அளவை குறைப்பது மட்டுமல்ல. எதிர்காலத்தில் மாரடைப்பு, பக்கவாதம், சிறுநீரக செயலிழப்பு, பார்வை இழப்பு போன்ற பாதிப்புகளின் அபாயத்தையும் குறைப்பதுமாகும். எனவே நல்ல வளர்ச்சிதை மாற்ற நினைவாற்றலை உருவாக்குவது நம் கைகளில்தான் உள்ளது.
இன்றே சர்க்கரை அளவை கட்டுப்படுத்துங்கள்! நாளைய ஆரோக்கியத்தை பாதுகாத்திடுங்கள்!
– டாக்டர் ரபீக், சதர்ன் டயாபடீஸ் சென்டர், மதுரை.
அலைபேசி : 94434 48683
