ADDED : நவ 13, 2026 05:39 PM
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இன்று (நவ.,13) அத்துமீறி அம்மன் சன்னதிக்குள் ஆட்களை அழைத்துச்சென்ற கைடு ஒருவருக்கும், அதை கண்டித்த பக்தருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இக்கோயிலில் கைடுகள் சிலர் சுற்றுலா பயணிகளிடம் கூடுதல் கட்டணம் பெற்று அம்மன், சுவாமி தரிசனத்திற்கு அழைத்துச்சென்றதாக கடந்தாண்டு சர்ச்சை எழுந்தது. இதைதொடர்ந்து சுற்றுலாத்துறையால் அங்கீகரிக்கப்பட்ட கைடுகள் மட்டுமே கோயிலுக்குள் அதுவும் அம்மன் சன்னதி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டு, அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ‘கைடு’ என்ற பெயரில் ஒருவர் இன்று அதிகாலை சிலரை கோயில் ஊழியர்களின் ஆதரவோடு அழைத்து வந்தார். அப்போது திருவனந்தாள் பூஜை நடந்துக்கொண்டிருந்ததால் கதவு அடைக்கப்பட்டிருந்தது. கதவை திறந்த அந்நபர், தான் அழைத்து வந்தவர்களை உள்ளே அழைத்துச்செல்ல முயன்றார். அங்கிருந்த பாதுகாவலர் தடுத்த போது மிரட்டும் தொனியில் எச்சரித்தார். இதை அங்கிருந்த பக்தர் ஒருவர் கண்டிக்க, கைடுக்கும் அவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. போலீசார் சமரசம் செய்தனர்.
பக்தர்கள் கூறுகையில், ‘‘நீண்டவரிசையில் நாங்கள் காத்திருந்த நிலையில் ‘செல்வாக்கை’ பயன்படுத்தி அந்நபர் வந்தவுடன் உள்ளே செல்ல முயன்றதாலேயே பிரச்னை ஏற்பட்டது. இதற்கு கோயில் நிர்வாகம் தீர்வு காண வேண்டும். மேலும் தினமும் காலை 8:30 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகம் நடக்கும். அப்போது ஓதுவார் பாடுவது ஒலிபெருக்கிகள் மூலம் சித்திரை வீதியில் உள்ள பக்தர்களுக்கு கேட்கும். ஆனால் சமீபகாலமாக கேட்பதில்லை. நவராத்திரி விழாவின்போதும் கேட்கவில்லை. வழக்கம் போல் சித்திரை வீதியில் கேட்க ஏற்பாடு செய்ய வேண்டும்’’ என்றனர்.
