தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ இன்னமும் தொடரும் டிஜிட்டல் கிராப் சர்வே

 இன்னமும் தொடரும் டிஜிட்டல் கிராப் சர்வே

 இன்னமும் தொடரும் டிஜிட்டல் கிராப் சர்வே


ADDED : பிப் 03, 2026 06:01 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 03, 2026 06:01 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மதுரை: ராபி பருவத்திற்கான சீசன் முடிய உள்ள நிலையில் 75 சதவீதம் அளவிற்கே டிஜிட்டல் கிராப் சர்வே பணிகள் முடிந்துள்ளன. இன்னமும் 25 சதவீதம் பணி பாக்கியுள்ளதால் மாற்று வழிகளை கையாள வேண்டும் என விவசாயத்துறை அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.

மூன்றாண்டுகளாக மத்திய அரசின் டிஜிட்டல் கிராப் சர்வே மூலம் விவசாயிகளின் வயலில் இருந்து பயிர் அல்லது தானிய போட்டோ எடுக்கப்பட்டு போர்ட்டலில் பதிவிடப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் தான் ஒவ்வொரு மாநிலத்திலும் எவ்வளவு ஏக்கரில் என்னென்ன பயிர்கள் சாகுபடியாகின்றன, எவ்வளவு உரம், இடுபொருட்கள் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு முடிவுகள் மத்திய அரசால் எடுக்கப்படுகிறது.

ஆண்டுமுழுவதும் ராபி, காரி, கோடை என அந்தந்த சீசனுக்கு ஏற்ப ஒவ்வொரு முறையும் விவசாயியின் வயலில் உள்ள பயிர்களை போட்டோ எடுப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ராபி பருவம் அக்டோபர் முதல் மார்ச் 31 வரை உள்ள சீசன் என்றாலும் பாதிக்கு மேற்பட்ட விவசாயிகள் நவம்பரில் தான் சாகுபடி மேற் கொள்கின்றனர்.

வயலில் மக்காச்சோளம், கம்பு, சோளப்பயிர்கள் ஒரு மாத காலம் வரை ஒரே மாதிரியாகத் தான் தெரியும். போட்டோ எடுத்தாலும் அவற்றில் இலைகளை அடையாளம் காணமுடியாது. எனவே பெரும்பாலும் ராபி பருவத்திற்கு டிசம்பரில் தான் டிஜிட்டல் சர்வே எடுக்கப்படுகிறது. குறைந்தளவு கால அவகாசத்தில் சர்வே பணி எடுப்பது கடினமாக உள்ளது. தமிழகத்தில் உள்ள மொத்த விவசாய பரப்பளவாக 4 கோடியே 12 லட்சத்து 77 ஆயிரத்து 471 சப்டிவிஷன் எண்கள் கண்டறியப்பட்டுள்ளன. டிசம்பருக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு ஜனவரியும் முடிந்த நிலையில் தமிழகத்தில் 75 சதவீதம் அளவிற்கே பயிர்கள் கணக்கெடுப்பு முடிந்துள்ளது.

ராமநாதபுரம், துாத்துக்குடியில் 65 சதவீதம், சிவகங்கை, தஞ்சாவூர், விருதுநகரில் 70 சதவீதம், பிற மாவட்டங்களில் 75 சதவீத கணக்கெடுப்பு முடிந்துள்ளது. இன்னும் ஒருவாரத்திற்குள் முடிக்க திட்ட மிடப்பட்டுள்ளது.

இது ஆண்டுமுழுவதும் தொடரும் வேலை என்பதால் தமிழக அரசு மாற்று வழியைக் கையாள்வதே நல்லது என்கின்றனர் தமிழக வேளாண் அலுவலர்கள்.

அவர்கள் கூறியதாவது: கிராம அளவில் விவசாயப் பயிர்களை வேளாண் அலுவலர்கள், உதவி வேளாண் அலுவலர்கள் பார்வையிட்டு குறிப்பிட்டாலும் வி.ஏ.ஓ., நேரில் வந்து ஆய்வு செய்த பின்பே அடங்கல் வழங்குகிறார். அதேபோல பிர்க்கா அளவில் வருவாய் ஆய்வாளர், தாலுகா அளவில் உதவி இயக்குநர், மாவட்ட அளவில் டி.ஆர்.ஓ., மூலம் மாதந்தோறும் 5ம் தேதிக்குள் ஆய்வு நடத்தப்பட்டு கூட்டம் முடிக்கப்படும். இது மாதந்தோறும் அந்தந்த மாவட்டங்களில் உள்ள பயிர்களின் வளர்ச்சி குறித்த விவரங்கள் பதிவு செய்வதற்காக நடத்தப் படுகிறது.

ஒத்திசைவு கூட்டம் நடத்துவதற்கு முன்பாக நடத்தப்படும் பயிர் கணக்கெடுப்பையே டிஜிட்டல் கிராப் சர்வே திட்டமாக மாற்றினால் வேலை சுலபமாகி விடும். மத்திய அரசுக்கு என தனியாக பயிர் கணக்கெடுப்பு செய்ய வேண்டியது இல்லை.

இருமுறை பயிர் கணக்கெடுப்பு, டூப்ளிகேட் கணக்கெடுப்பு பிரச்னையும் முடிவுக்கு வரும். ஆண்டுதோறும் சீசனுக்கு ஏற்ப பயிர்க்கணக்கெடுப்பு தொடரும் என்பதால் மாதந்தோறும் நடக்கும் ஒத்திசைவு கூட்ட புள்ளி விவரங்களை டிஜிட்டல் கிராப் சர்வே பணியாக மாற்ற வேண்டும் என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us