ADDED : நவ 16, 2024 04:54 AM

திருப்பரங்குன்றம் : திருமங்கலம் - விருதுநகர் ரோட்டில் 4 கி.மீ., தொலைவில் உள்ள காட்டு பத்ரகாளி அம்மன் கோயில் முன்பு உள்ள விநாயகர் கோயிலில் பழமையான தான கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது.
மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி வரலாற்று துறை உதவி பேராசிரியர்கள் ராஜகோபால், பிறையா, முன்னாள் மாணவர் கார்த்திக்மணி, சமூக ஆர்வலர் அஸ்வத் ஆகியோர் கள ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் கூறியதாவது: வருடத்தை துவக்கமாக வைத்து ஆரம்பிக்கின்ற இந்த கல்வெட்டில் பிள்ளையார் கோயிலுக்கு தானமாக வழங்கியவர் பெயரும், தந்தை பெயரும், ஊரின் பெயரும் பொறிக்கப்பட்டுள்ளது. இது ஒரு அடி நீளமும், 4 அடி அகலமும் கொண்ட பலகை கல்வெட்டாகும்.
இந்த கல்வெட்டு 19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த கல்வெட்டில் 'துந்துபவர வருசம் வைகாசி மாதம் 21ம் தேதி, ஆங்கில வருடம் பொ. ஆ 1862 விக்னேஸ்வரர் கோயிலுக்கு வேங்கிட சமுத்திரத்தை சார்ந்த ராமசாமி பிள்ளையாரின் மகன் சக்கரை பிள்ளையார் கொடுத்த உபயம்' என பொறிக்கப்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற தொல்லியல் பேராசிரியர் சாந்தலிங்கம் உதவியுடன் படிக்கப்பட்டது என்றனர்.