UPDATED : மே 18, 2026 05:59 PM
ADDED : மே 18, 2026 05:51 PM
மதுரை:''மிளகாயில் அழுகல் நோயை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த நோய் மேலாண்மை முறையை கடைப்பிடிக்க வேண்டும்'' என தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் பிரபா தெரிவித்தார்.
மதுரையில் 80 எக்டேர் பரப்பளவில் மிளகாய் பயிரிடப்படுகிறது. ஆந்த்ராக்னோஸ் வகை பூஞ்சையால் அழுகல் நோய் ஏற்பட்டு மகசூலை பாதிக்கிறது. நோயற்ற விதைத்தேர்வும், விதை நேர்த்தியும் அவசியம். நோய் பரவுவதைத் தடுக்க, பூக்கும் மற்றும் காய்க்கும் காலங்களில் கேப்டன் 0.2 சதவீதம் திரம் 0.25 சதவீதம் அல்லது புரோபிகோனசோல் 0.1 சதவீதம் தெளிக்கலாம்.
பாதிக்கப்பட்ட மிளகாய் செடி கிளைகளை அகற்றி எரிக்க வேண்டும். உருளைக்கிழங்கு, தக்காளி பயிரிட்ட பிறகு மிளகாய் பயிரிடுவதைத் தவிர்க்க வேண்டும். சோயாபீன்ஸ் அல்லது சோளப் பயிர்களை பயிர் சுழற்சி முறையில் சாகுபடி செய்ய வேண்டும்.
வயலில் முறையான வடிகால் வசதி செய்ய வேண்டும். காற்றோட்டத்தை மேம்படுத்த செடிகளுக்கு இடையே போதுமான இடைவெளி பராமரிக்க வேண்டும். மண், விதைவழி நோய்த் தொற்றுகளைக் கட்டுப்படுத்த ஒரு கிலோ மிளகாய் விதைக்கு 4 கிராம் டிரைகோடெர்மா விரிடே அல்லது 2 கிராம் கார்பென்டாசிம் கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும்.
கேப்டன் 0.2 சதவீதம், திரம் 0.25 சதவீதம் அல்லது மில்டாக்ஸ் 0.2 சதவீதம் புரோபிகோனசோல் 25 இ.சி., 0.1 சதவீதம், கார்பென்டாசிம் 50 சதவீதம் டபிள்யூ.பி. 0.1 சதவீதம் அல்லது டை பென்கோனசோல் 25 இ.சி., 0.1 சதவீத பூஞ்சைக் கொல்லிகளை பூக்கும் பருவத்தில் இருந்து 3 முறை தெளிக்க வேண்டும். அதிக ஈரப்பத காலங்களில் 15 முதல் 20 நாட்கள் இடைவெளியில் மீண்டும் தெளிக்க வேண்டும்.
மண்ணில் பரவும் பூஞ்சை நோய்க் கிருமிகளைக் கட்டுப்படுத்த பண்ணை உரத்துடன் எக்டேருக்கு 3 கிலோ டிரைகோடெர்மா விரிடி கலந்து மண்ணில் இட வேண்டும். விபரங்களுக்கு தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகலாம் என்றார்.
