/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
வாழை, வெற்றிலை பயிர்களில் நோய் மேலாண்மை யோசனை
/
வாழை, வெற்றிலை பயிர்களில் நோய் மேலாண்மை யோசனை
ADDED : நவ 02, 2024 05:45 AM
திருப்பரங்குன்றம்: வெற்றிலை, வாழை பயிர்களில் வாடல் நோய் கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து திருப்பரங்குன்றம் தோட்டக்கலை உதவி இயக்குனர் கோகிலா சக்தி கூறியதாவது:
திருப்பரங்குன்றம் பகுதிகளில் சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக வாழை, வெற்றிலை பயிர்களில் வாடல் நோய் தாக்கம் ஏற்பட்டுள்ளது. வாழையை பொருத்தவரை ரஸ்தாளி, முப்பட்டை ரகங்களில் அதிக பாதிப்பு உண்டாக்கி உள்ளது.
சரியான வடிகால் வசதி இல்லாத வயல்களில் இந்நோய் வேகமாக பரவும். இந்நோய் பூஞ்சான் தாக்குதலால் ஏற்படுவதால் மண்ணில் அதிக இயற்கை இடுபொருட்களை இடுவது அவசியம்.
வாழைக்கு பயிர் சுழற்சியை கடைபிடிக்க வேண்டும். ஒரு பருவம் முடிந்த பின் இந்நோய் எதிர்ப்பான பூவன், ரோபஸ்டா ரகங்களை சாகுபடி செய்யலாம். மண் மற்றும் நீரின் மூலம் அதிகமாக பரவும் பூஞ்சானம் என்பதால் சொட்டு நீர் பாசன முறையே சிறந்தது.
நடவு செய்ய கன்றுகள் தேர்வு செய்யும் போது இந்நோய் தாக்காத வயல்களில் இருந்து வாழைக்கன்றுகளை பெற்று நடவு செய்ய வேண்டும். அதிக தாக்குதல் ஏற்பட்ட வாழை அடிப்பகுதியில் வெடித்து காய்ப்புக்கு வராது என்பதால் அதனை முற்றிலும் அகற்ற வேண்டும். அகற்றிய குழிகளில் 2 கிலோ அமில சுண்ணாம்பு இடுதல் அவசியம்.
தடுக்கும் வழிமுறைகள்
குழிக்கு 200 கிராம் வேப்பம் புண்ணாக்கு இடவேண்டும். பேசில்லஸ் உயிர் பூஞ்சான கொல்லியினை எக்டேருக்கு 2.50 கிலோ என்ற விகிதம் தொழு உரம் அல்லது வேப்பம் புண்ணாக்குடன் கலந்து இட வேண்டும். ஒரு கன்றுக்கு 10 கிராம் என்ற அளவில் சூடோமோனஸ் புளுரோ சென்ஸ் இடுதல் வேண்டும். போர்டோ கலவையை மண் அல்லது மரப்பாத்திரத்தில் 20 லிட்டர் தண்ணீரில் 400 கிராம் தாமிர சல்பேட் மற்றும் 400 கிராம் சுண்ணாம்பை தனித்தனியாக கரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு தாமரை சல்பேட் கரைசலை சுண்ணாம்பு கரைசலில் ஊற்றி நன்கு கலக்க வேண்டும். இதனை தெளிப்பது மூலம் பூஞ்சானம் பரவுவது தடுக்கப்படும். வெற்றிலையை பொருத்தவரை ஒரு கொடிக்கு இரண்டு கிராம் என்ற அளவில் டிரைக்கோடெர்மா விரிடி உயிர் பூஞ்சான கொல்லியினை தொழு உரத்துடன் கலந்து 2 மாத இடைவெளியில் அதிகாலை அல்லது மாலை நேரங்களில் வைக்கலாம். வயல் ஓரங்களில் செண்டு மல்லி செடிகள் நடுதல், வயல்களில் புங்கம் புண்ணாக்கு இடுதல், எருக்கு மற்றும் வேம்பு இலைகளை மடக்கி உழுதல் நல்லது என்றார்.