நலத்திட்டங்கள் தொடர மீண்டும் வேண்டும் :தி.மு.க., வடக்கு தொகுதி தி.மு.க., வேட்பாளர் தளபதி பிரசாரம்
நலத்திட்டங்கள் தொடர மீண்டும் வேண்டும் :தி.மு.க., வடக்கு தொகுதி தி.மு.க., வேட்பாளர் தளபதி பிரசாரம்
ADDED : ஏப் 10, 2026 11:06 PM

மதுரை: தமிழகத்தில் மக்களுக்கான நலத்திட்டங்கள் தடையின்றி தொடர மீண்டும் தி.மு.க., அமைய மக்கள் ஓட்டளிக்க வேண்டும் என மதுரை வடக்கு தொகுதி தி.மு.க., வேட்பாளர் தளபதி தேர்தல் பிரசாரத்தில் வேண்டுகோள் விடுத்தார்.
வண்டியூர் பூங்காவில் காலை நடைப்பயிற்சி மேற்கொண்ட வேட்பாளர் தளபதி, அங்கு வந்தோரிடம் அரசின் சாதனைகள் அடங்கிய நோட்டீஸ் வினியோகம் செய்து ஓட்டு சேகரித்தார். பீபீகுளம் உழவர்சந்தை பகுதிக்கு சென்று வியாபாரிகளிடம் பிரசாரம் செய்தார். மாலை மதுரை புதுார் மாதா கோயில் மெயின்ரோடு காந்திபுரம், எஸ்.ஆர்.நகர், லுார்துநகர், டோபி காலனி, டி.ஆர்.ஒ., காலனி, ரிசர்வ் லைன் உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார்.
அவர் பேசியதாவது: இதுவரை இல்லாத அளவில் கடந்த 5 ஆண்டுகளில் முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் மக்களுக்கான நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. மதுரை மக்களுக்கும் ரூ.5 ஆயிரம் கோடிக்கும் மேலான திட்டங்கள் கிடைத்துள்ளன. இத்தொகுதியில் பாலங்கள், பந்தல்குடி கால்வாய் சீரமைப்பு என பல்வேறு திட்டங்களை அரசு செய்துள்ளது. மகளிருக்கான உரிமைத் தொகை நாட்டிலேயே தமிழகத்தில் தான் முதல்முறையாக வழங்கப்பட்டுள்ளது. தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வந்து இத்தொகையை ரூ. 2 ஆயிரமாக உயர்த்தி வழங்கும். மீண்டும் ஆட்சி அமைத்தவுடன் ரூ.8 ஆயிரத்துக்கான கூப்பன் வழங்கப்படும். மக்களுக்கான திட்டங்கள் தடையின்றி தொடர மீண்டும் தி.மு.க., ஆட்சியை தொடரச் செய்யுங்கள். இவ்வாறு பேசினார்.
மதுரை ஜமாத் தலைவர் லியாகத் அலிகான், நிர்வாகிகள் அறிவுநிதி, குரும்பன், சரவணன், ராஜேஷ்கண்ணா, முகேஷ்வர்மா, வாக்கர்ஸ் கிளப் சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
