ADDED : ஜூலை 20, 2025 04:48 AM
கொட்டாம்பட்டி: கொட்டாம்பட்டி வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அருள்மணி தென்னை விவசாயிகளுக்கு தெரிவித்துள்ளதாவது:
தென்னையில் கரையான் தாக்குதலை கட்டுப்படுத்த காய்ந்த மட்டைகள் அல்லது பண்ணை கழிவுகள் இல்லாதவாறு வயலை சுத்தமாக பராமரிக்க வேண்டும்.
அடி உரமாக மரம் ஒன்றுக்கு 2 கிலோ வேப்பம் புண்ணாக்கு இடவேண்டும். தவிர வேப்ப எண்ணெய் 3 சதவீதம் அல்லது வேப்பங்கொட்டை சாறு 5 சதவீதம் அல்லது குளோரிபைரிபாஸ் லிட்டருக்கு 3 மி.லி., ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
கரையான்கள் எளிதில் தாக்கக்கூடிய மக்காச்சோளம், நிலக்கடலை, பருத்தி, பயறு உள்ளிட்ட பயிர்களை ஊடுபயிராக பயிரிடக் கூடாது. மரத்திற்கு போதுமான அளவு நீர் பாய்ச்சுதல், சரிவிகித அடிப்படையில் ஊட்டச்சத்து கொடுத்தல், மரத்தின் அடியில் சுண்ணாம்பு பூச வேண்டும். முக்கியமாக வடிகால் வசதி அமைக்க வேண்டும் என்றார்.