ADDED : டிச 20, 2024 03:06 AM
மதுரை: மதுரை வேளாண் கல்லுாரி வளாகத்தில் உள்ள வேளாண்மை அறிவியல் நிலையம் சார்பில் விவசாயிகள், தொழில்முனைவோருக்கு உள்நாட்டு மீன் வளர்ப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.
திட்ட ஒருங்கிணைப்பாளர் சுப்ரமணியம் பேசுகையில்,'' மாமிச உணவில் அனைத்து வயதினருக்கும் ஏற்ற உணவு மீன். மதுரையில் மீன் வளர்ப்புக்கு ஏற்ற சூழல் உள்ளதோடு இந்த தொழிலின் தேவை ஆண்டு முழுவதும் உள்ளது'' என்றார். பண்ணை குட்டை அமைத்தல், அயிரை, விரால், வண்ணமீன் வகைகள், குணம், வளர்ப்பு முறை, தீவன, நோய் மேலாண்மை, அறுவடை குறித்து மீன்வளத் துறை ஆய்வாளர் (ஓய்வு) பெரியகருப்பன் விளக்கினார்.
மதுரை மாவட்ட மீன்வளத் துறை ஆய்வாளர் அம்சா காந்தி நவீன தொழில்நுட்பங்கள், மத்திய மாநில அரசு திட்டங்கள் குறித்து பேசினார். கால்நடை டாக்டர் சரவணன் ஏற்பாடுகளை செய்திருந்தார். உதவி பேராசிரியை ஜோதிலட்சுமி நன்றி கூறினார்.