தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/தானமாக தாருங்கள் தாய்ப்பால்

தானமாக தாருங்கள் தாய்ப்பால்

தானமாக தாருங்கள் தாய்ப்பால்


UPDATED : நவ 29, 2026 12:00 AM

ADDED : நவ 28, 2026 09:30 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 29, 2026 12:00 AM ADDED : நவ 28, 2026 09:30 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தாய்ப்பாலே குழந்தைகளுக்கான மருந்து தான். தாய்ப்பால் கிடைக்காத, பற்றாக்குறையுள்ள குழந்தைகளின் தேவையை பூர்த்தி செய்வதற்காக 2025 ஏப்ரலில் மதுரை மஸ்தான்பட்டியில் உள்ள ரியோ குழந்தைகள் நல மருத்துவமனையில் தாய்ப்பால் வங்கி தொடங்கப்பட்டது.

குறைமாத குழந்தைகள், எடை குறைந்த, நலிவுற்ற குழந்தைகளுக்கு தாய்ப்பால் தான் முக்கியம். சில நேரங்களில் அக்குழந்தைகளுக்கு தாய்ப்பால் கிடைப்பதில் சிரமம் ஏற்படும். 37 வாரம் நிறைவடைந்த நிலையில் பிறக்கும் குழந்தைகள் எடை குறைவாக இருந்து தாய்க்கு பால் சுரக்காத நிலை இருந்தால் தாய்ப்பால் கட்டாயம் தர வேண்டும். இரட்டை குழந்தைகள் பிறந்தாலும் சில நேரங்களில் எடை குறைவாக இருக்கும்.

தற்போது செயற்கை கருத்தரிப்பு உட்பட பல்வேறு காரணங்களால் 27 முதல் 28 வாரங்களில் குறைபிரசவத்தில் குழந்தைகள் பிறக்கின்றன. இவர்களின் குடல் முழுமையாக வளர்ச்சி பெற்றிருக்காது என்பதால் பசுவின் பால், பிறவகை பதப்படுத்தப்பட்ட பால் கொடுத்தால் செரிமானம் ஆகாது. குடலில் நோய்த்தொற்று ஏற்படுவதற்கும் வாய்ப்புள்ளது. டாக்டர்கள் நோய்களுக்கு சிகிச்சை அளித்தாலும், தாய்ப்பால் மட்டுமே செரிமானம் தரும் என்பதால் தாய்ப்பாலை சிறந்த மருந்தாக சொல்கிறோம்.

குறைமாத குழந்தைகளின் உயிரைக் காப்பதே தாய்ப்பால் தான். இந்த குழந்தைகளின் தாய்க்கு பால் சுரப்பு குறைவாக இருக்கலாம். பிற வகை பால் கொடுக்கும் போது ஒவ்வாமை ஏற்பட்டு உயிருக்கே ஆபத்து உருவாகும். இதுபோன்ற குழந்தைகளுக்கு தாய்ப்பால் வங்கியில் இருந்து தானம் பெற்று தாய்ப்பால் வழங்குகிறோம். இதன் மூலம் நிறைய குறைமாத குழந்தைகள் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

தாய்ப்பால் வங்கி



பல்வேறு காரணங்களால் பெண்களுக்கு தாய்ப்பால் சுரப்பு குறைவாக இருக்கும். இதற்காகத் தான் தாய்ப்பால் வங்கி ஆரம்பிக்கப்பட்டது. வங்கியின் ப்ரீசரில் பதப்படுத்தப்பட்ட நிலையில் 50 லிட்டர் அளவிற்கு பாட்டில்களில் தாய்ப்பாலை சேகரித்து ஆறு மாதங்கள் வரை சேமிக்கலாம். இதற்கென தனியாக பாதுகாப்பு அறை அமைக்கப்பட்டுள்ளது.

தாய்ப்பாலை பெற்றவுடன் நேரடியாக குழந்தைகளுக்குத் தருவதில்லை. அதை இரண்டு வகை பரிசோதனை செய்து பதப்படுத்திய பின் இரண்டு நாட்கள் கழித்தே ப்ரீசரில் பாதுகாக்கிறோம். இதுவரை எங்கள் மருத்துவமனையில் குழந்தை பெற்ற பெண்கள், குழந்தைகளுக்கு சிகிச்சை பெற வந்த பெண்கள் என 170 பேரிடம் இருந்து தாய்ப்பால் தானமாக பெற்றுள்ளோம்.

தாய்ப்பால் தாராளமாக சுரக்கும் பெண்கள் பாலை தானம் தரலாம். மருத்துவமனைக்கு வந்து தாய்ப்பால் கொடுப்பது துாரம் என நினைத்தால் தாய்ப்பாலை சேகரித்து பாத்திரத்தில் மூடி ப்ரிட்ஜில் வைத்து பாதுகாத்தால் எங்கள் நிறுவன ஊழியர்கள் நேரடியாக வந்து பெற்றுக் கொள்வர்.

மருத்துவமனையின் தாய்ப்பால் வங்கிக்கு தானம் செய்ய வந்தாலும் அனுமதிக்கிறோம். 10 மில்லி அளவு தாய்ப்பால் கிடைத்தாலும் குறைமாத குழந்தைகளுக்கு அது பெரிய வரம் தான்.

எங்கள் மருத்துவமனையில் உள்ள குழந்தைகளுக்கு மட்டுமின்றி சுற்றியுள்ள மாவட்டங்களில் உள்ள அரசு, தனியார் மருத்துவமனை குழந்தைகளுக்கும் தாய்ப்பால் தானமாக வழங்குவதால் தேவை அதிகம்.

வாட்ஸ் ஆப் குழு



தாய்ப்பால் தேவை என தேடுவோருக்காக வாட்ஸ் ஆப் குழுவை உருவாக்கியுள்ளோம். அலைபேசியில் தொடர்பு கொண்டாலும் 24 மணி நேர சேவை செய்கிறோம். குழந்தை பிறந்து எத்தனை நாளாகிறது, எடை, தாய், தந்தையின் ஆதார் நகல், கர்ப்பமானது குறித்த அரசின் ஆர்.சி.எச்., பதிவெண்ணுடன் விண்ணப்பிக்க வேண்டும். எந்த டாக்டரிடம் சிகிச்சை பெறுகின்றனரோ அவரிடம் குழந்தையின் எடை, தினமும் தேவைப்படும் தாய்ப்பால் அளவு போன்ற விவரங்களுடன் அனுமதி கடிதம் பெறவேண்டும். குழந்தையின் தந்தையிடமே தாய்ப்பால் ஒப்படைக்கப்படும். தந்தை இல்லாவிட்டால் உறவினரின் ஆதார் எண்ணுடன் டாக்டரின் ஒப்புதல் கடிதம் தரவேண்டும். நாங்கள் தானமாக தரும் தாய்ப்பால் சரியான குழந்தைக்குத் தான் சேர்கிறது என்பதை கண்காணிக்க வேண்டி உள்ளது.

இதுவரை 530 லிட்டர் அளவு தாய்ப்பால் தானமாக பெற்று 437 குழந்தைகளுக்கு 520 லிட்டர் அளவு வழங்கியுள்ளோம். தற்போது ரோட்டரி கிளப் நிதியுதவியுடன் தாய்ப்பால் வங்கி நடத்துகிறோம். தாய்ப்பாலை தானமாக பெற்று எங்களிடம் ஒப்படைப்பதற்கு தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள் முன்வரலாம்.

– டாக்டர் அகிலாதேவி குழந்தைகள் நல நிபுணர் ரியோ குழந்தைகள் நல மருத்துவமனை, மதுரை அலைபேசி: 78456 56444

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us