மீண்டும் திராவிட மாடல் ஆட்சி அமையும்: தி.மு.க., வேட்பாளர் கிருத்திகா தங்கபாண்டி பிரசாரம்
மீண்டும் திராவிட மாடல் ஆட்சி அமையும்: தி.மு.க., வேட்பாளர் கிருத்திகா தங்கபாண்டி பிரசாரம்
ADDED : ஏப் 17, 2026 11:25 PM

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் தொகுதி தி.மு.க., வேட்பாளர் கிருத்திகா தங்கப்பாண்டி திருப்பரங்குன்றம் 16கால் மண்டபம் அருகே ஓட்டு சேகரித்தார்.
அவர் பேசியதாவது: 30 ஆண்டுகளாக திருப்பரங்குன்றம் தொகுதி அ.தி.மு.க., வசம் உள்ளது. தொகுதி முன்னேற்றத்திற்காக எந்த பெரிய திட்டங்களும் அவர்களால் கொண்டு வரவில்லை. பெண்களுக்கான மேம்பாட்டு திட்டங்கள் அண்ணாதுரை காலம், கருணாநிதி காலம், ஸ்டாலின் காலம் வரை தொடர்ந்து செயல்படுத்தப்படுகிறது. அண்ணாதுரை பெண் உரிமைக்கு போராடினார். கருணாநிதி பெண்களின் உயர் கல்விக்கு போராடினார். ஸ்டாலின் பெண்களின் முன்னேற்றத்திற்காக பாடுபடுகிறார். பொருளாதார வளர்ச்சிக்கு திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார். 2021ல் கொடுத்த அனைத்து வாக்குறுதிகளிலும் நிறைவேற்றியுள்ளார்.
குடும்பத் தலைவிகள் கையில் பணம் கொடுத்தால் செலவாகி விடும். அதனால்தான் கூப்பன் கொடுக்கிறார். இதன்மூலம் நினைத்த பொருட்களை நினைத்த நேரத்தில் வாங்கிக் கொள்ளலாம். மக்களின் தேவைக்காக தான் திட்டங்கள் தீட்டுகிறார் முதல்வர் ஸ்டாலின். தேர்தலில் 200க்கும் மேற்பட்ட தொகுதியில் வெற்றி பெற்று திராவிட மாடல் ஆட்சி மீண்டும் மலர இருக்கிறது.
திருப்பரங்குன்றம் ஆளுங்கட்சி தொகுதியாக இருக்க வேண்டாமா. நான் எம்.எல்.ஏ., வாக வந்தவுடன் அடிப்படை பிரச்னைகளை தீர்ப்பேன். முன்மாதிரி தொகுதியாக திருப்பரங்குன்றத்தை மாற்றுவேன். பாதாள சாக்கடை திட்டத்தை விரைந்து முடிப்பேன். அனைத்து பகுதிகளிலும் தார் சாலைகள் அமைக்கப்படும் என்றார்.
