/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பச்சிளம் குழந்தைகளுக்கு சொட்டுமருந்து பெட்டகம்
/
பச்சிளம் குழந்தைகளுக்கு சொட்டுமருந்து பெட்டகம்
ADDED : பிப் 21, 2026 07:02 AM
மதுரை: மதுரை அரசு மருத்துவமனை பச்சிளம் குழந்தைகள் நலத்துறையில் சொட்டுமருந்து பெட்டகம் வழங்கும் விழா நடந்தது. டீன் அருள் சுந்தரேஷ் குமார் தலைமை வகித்தார். குழந்தைகள் நலத்துறை இயக்குநர் நந்தினி, துணை பேராசிரியர் செந்தில்குமார், ஆர்.எம்.ஓ., க்கள் முரளிதரன், சரவணன் கலந்து கொண்டனர்.
பச்சிளம் குழந்தைகள் நலத்துறைத் தலைவர் அசோக்ராஜா கூறியதாவது: மாநிலம் முழுவதிலும் 92 சிறப்பு பிரிவுகள் பச்சிளம் குழந்தைகளுக்காக செயல்படுகின்றன. வார்டில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வீடு திரும்பும் 2.5 கிலோ எடைக்கு குறைவான குழந்தைகளுக்கு சத்துமருந்து அடங்கிய சொட்டுமருந்து பெட்டகம் வழங்கப்படுகிறது. இதில் விட்டமின் டி, இரும்புச்சத்து, மல்டி விட்டமின் சொட்டுமருந்துகள், விளக்கக் கையேடு உள்ளது. மாதம் ஒருமுறை வீதம் 6 மாதங்களுக்கும் சில குழந்தைகளுக்கு ஓராண்டு வரையும் சத்துமருந்து பெட்டகம் வழங்கப்படுகிறது.
விட்டமின், இரும்புச்சத்து குறைபாட்டால் உண்டாகும் ரிக்கெட்ஸ் எலும்புநோய், ரத்தசோகை வராமல் இந்த சொட்டுமருந்துகள் தடுக்கும். மேலும் எலும்பு வளர்ச்சி, உடல் எடை, கண் வளர்ச்சியுடன் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும். பச்சிளம் குழந்தைகளின் இறப்பு விகிதத்தை குறைக்கும். டாக்டர்கள் பரிந்துரைத்த சரியான அளவில் குழந்தைக்கு சொட்டுமருந்து வழங்க வேண்டும் என்றார்.

