தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ நெற்பயிரில் வறட்சி மேலாண்மை

 நெற்பயிரில் வறட்சி மேலாண்மை

 நெற்பயிரில் வறட்சி மேலாண்மை


ADDED : மார் 11, 2026 04:59 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 11, 2026 04:59 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: ''கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் நெற்பயிர்களில் வறட்சி மேலாண்மை அவசியம்'' என்கிறார் நீர் மேலாண்மை பயிற்சி நிலைய வேளாண்மை துணை இயக்குநர் கமலாலெட்சுமி.

அவர் கூறியதாவது: வறண்ட காற்றாலும், மண்ணின் ஈரப்பதம் குறைவதாலும் கோடை பருவ பயிர்களில் தாவர வளர்ச்சி நிலை, பூட்டை முதல் கதிர்விடும் பருவம் வரை, முதிர்ச்சி பருவம் ஆகிய நிலைகளில் அதிக பாதிப்பை ஏற்படுத்தும்.

வளர்ச்சி நிலையில் வேர் வளர்ச்சி சிறப்பாக இருக்க 5 செ.மீ., அளவு தண்ணீரும் அதன் பின் 2 செ.மீ., அளவு தண்ணீரும் வழங்கினால் அதிக துார்கள் உருவாகி வேர் மண்ணில் வலுவாக பிடிக்க உதவும்.

இப்பருவத்தில் ஈரப்பத குறைவு ஏற்பட்டால் 30 சதவீத விளைச்சல் குறைய வாய்ப்புள்ளது.

பூக்கும் நிலையில் இருந்து கதிர் வெளிவரும் நிலை முக்கியமானது. கதிர் வெளிவருவதற்கு 11 நாட்களுக்கு முன்பும் அல்லது 3 நாட்களுக்கு முன்பும் பாசனம் செய்ய வேண்டும்.

இப்பருவத்தில் ஏற்படும் ஈரப்பத குறைவு விளைச்சலில் 50 முதல் 60 சதவீதம் வரை பாதிப்பை ஏற்படுத்தும்.

பால் பிடிக்கும் பருவத்தில் இருந்து கதிர் முற்றும் பருவம் வரை நீரின் தேவை குறைவு. அறுவடைக்கு 7 முதல் 10 நாட்களுக்கு முன் நீரை முழுமையாக வடித்து விடலாம். நீர் குறைபாடு பகுதிகளில் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 'சைக்கோசல்' ஒரு மில்லி கலந்து தெளித்தால் ஈரப்பத அழுத்தத்தால் ஏற்படும் பாதிப்பை குறைக்கலாம்.

பொட்டாசியம் உரத்தை 50 சதவீதம் அடியுரமாகவும், மீதி 50 சதவீத உரத்தை கதிர்விடும் பருவத்திலும் இட வேண்டும். உயிர் உரங்கள் இட்டு விதைநேர்த்தி செய்தால் வறட்சி பாதிப்பை குறைக்கலாம்.

மேலும் விதைகளை ஒரு சதவீத கே.சி.எல்., கரைசலில் 16 மணி நேரம் ஊற வைத்து நிழலில் உலர்த்தி விதைத்தால் ஆரம்ப கால ஈரப்பத குறைவை கடந்து பயிர் வளர உதவும். பயிரின் வளர்ச்சி நிலைகளில் ஈரப்பத குறைவை தடுக்க கயோலின் 3 சதவீதம் அல்லது ஒரு சதவீத கே.சி.எல்., இலைத் தெளிப்பு செய்தால் வறட்சி பாதிப்பில் இருந்து நெற்பயிரை பாதுகாக்கலாம் என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us