ADDED : ஜூலை 15, 2026 02:57 AM
பெருங்குடி: மதுரை மாவட்டம் பெருங்குடி பகுதியில் நேற்று முன்தினம் இரவு 3 பேர் ஆயுதங்களுடன் நிற்பதாக திருமங்கலம் டி.எஸ்.பி., அலுவலகத்திற்கு தகவல் கிடைத்தது. குற்றப்பிரிவு ஏட்டு ராஜா, 'மப்டி'யில் சென்று பெருங்குடி பயணியர் விடுதி அருகே நின்றிருந்த மூவரிடம் விசாரித்தபோது அவர்கள் மதுரை, ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தாலுகா காட்டாமங்கலத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிந்தது.
போலீஸ் என தெரிந்ததும், போதையில் இருந்த அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கைகலப்பு ஏற்பட, ஆத்திரமுற்ற மூவரும் ஆயுதங்கள், சிமென்ட் கற்களால் ஏட்டுவை தாக்கிவிட்டு தப்பினர். காயமுற்ற ராஜா சிகிச்சையில் உள்ளார். கண்காணிப்பு கேமராவை பெருங்குடி போலீசார் ஆய்வு செய்ததில் தாக்குதலில் ஈடுபட்டது மதுரை வில்லாபுரம் முகேஷ், கமுதி காட்டாமங்கலம் முத்துக்காளை, பாண்டியராஜன் எனத் தெரிந்தது. அவர்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
