ADDED : ஏப் 18, 2026 06:34 PM

மதுரை: சட்டசபை தேர்தலை முன்னிட்டு 100 சதவீதம் ஓட்டளிப்பதை வலியுறுத்தும் வகையில், மாநகராட்சி சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதற்காக மாநகராட்சி வளாகத்தில் நேற்று ரங்கோலி கோலப் போட்டி நடத்தப்பட்டது. மாநகராட்சி பள்ளி ஆசிரியர்கள், அலுவலர்கள் 150 பேர் பங்கேற்றனர்.
போட்டியில் வென்றவர்களுக்கு கமிஷனர் சித்ரா பரிசு வழங்கினார். துணை கமிஷனர் ஜெய்னுலாப்தீன், உதவி கமிஷனர் முகம்மது அலி ஜின்னா, வருவாய் அலுவலர் பார்த்தசாரதி உட்பட பலர் பங்கேற்றனர்.
* விதைப்பந்து விழிப்புணர்வு
மேல அனுப்பானடி பசுமை செயற்பாட்டாளர் அசோக்குமார், விதைப்பந்துகள் மூலம் கைவிரலை வரைந்து தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
அவர் கூறுகையில், ''இப்பூமிக்கும் மனித வாழ்வுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் மரங்களை உருவாக்க விதைப்பந்துகள் உதவுகின்றன. அதுபோல, 100 சதவீதம் ஓட்டளிப்பதால் மட்டுமே வலிமையான ஜனநாயகத்தை உருவாக்க முடியும்'' என்றார்.
