ADDED : ஏப் 01, 2026 05:51 PM
வாடிப்பட்டி: பரவையில் இலவச கம்ப்யூட்டர் பயிற்சிக்கு மின்சாரம் திருடியவர்கள் குறித்து பரவை பேரூராட்சி நிர்வாகம் விசாரித்து வருகிறது.
பரவை பேரூராட்சி அண்ணா நகரில் சந்தன மாரியம்மன் கோயில் உள்ளது. இங்குள்ள மந்தையில் சில தனியார் நிறுவனங்களின் 'டிஜிட்டல் ஆய்வக' பஸ் நிறுத்தப்பட்டுள்ளது. அதில் 20க்கும் மேற்பட்ட கம்ப்யூட்டர்களை வைத்து இலவச பயிற்சி வகுப்பு நடக்கிறது.
இதற்கான மின்சாரத்தை கோயில் முன்புள்ள உயர் கோபுர மின் விளக்கிற்கான மின்சாதன பெட்டியில் இருந்து எடுத்துள்ளனர். இந்தமின் திருட்டு படம் வைரலானது.
இதுகுறித்து மில் அலுவலரிடம் கேட்டபோது, ''பஸ்சில் யு.பி.எஸ்., வசதி உள்ளது. ஆரம்ப மின் தேவைக்காக அப்பகுதி தி.மு.க., பெண் கவுன்சிலரின் கணவர் திருப்பதியிடம் அனுமதி பெறப்பட்டதாக' கூறினார்.
இதுபற்றி திருப்பதியிடம் கேட்டபோது, ''ஓரிரு நாட்கள்தான் என நினைத்தேன். ஆனால் வகுப்புகள் தொடர்ந்து நடக்கிறது என்று தெரிந்ததும் பேரூராட்சி நிர்வாகத்திடம் அனுமதி பெறுங்கள் எனக் கூறிவிட்டேன்'' என்றார்.
பேரூராட்சி நிர்வாகத்தினர் கூறுகையில், ''எங்கள் கவனத்திற்கு வந்ததும் அலுவலர்களை விசாரிக்க அனுப்பியுள்ளோம்'' என்றனர்.
