/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரையில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்
/
மதுரையில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்
ADDED : ஜன 01, 2026 05:48 AM
மதுரை: மதுரையில் நேற்று இரவு ஆங்கில புத்தாண்டை மக்கள் உற்சாகமாக கொண்டாடி வரவேற்றனர். பல்வேறு இடங்களில் வாணவேடிக்கை களைகட்டியது. சர்ச்களில் நள்ளிரவில் சிறப்பு திருப்பலி, ஆராதனைகள் நடந்தன.
மதுரை புதூர் புனித லுார்து அன்னை சர்ச்சில் மதுரை உயர்மறை மாவட்ட பேராயர் அந்தோணிசாமி சவரிமுத்து தலைமை வகித்து கூட்டுத் திருப்பலி நிறைவேற்றினார். தன்னுடைய மறையுரையில், 'இப்புதிய ஆண்டு ஒளிநிறைந்தாக, மகிழ்ச்சியை தரும் ஆண்டாக இருக்கும்' என்றார். பாதிரியார் ஜார்ஜ், உதவி பாதிரியார்கள் பாக்கியராஜ், பிரபு, அஜிலாஸ், குணா முன்னிலை வகித்தனர். முன்னதாக, பேராயர் அனைவருக்கும் புத்தாண்டு ஆசீர்வாதம் வழங்கினார்.
மதுரை கீழவாசல் துாய மரியன்னை சர்ச்சில் பாதிரியார் ஹென்றி ஜெரோம், டவுன்ஹால் ரோடு சர்ச்சில் பாதிரியார்அமல்ராஜ், ஞான ஒளிவுபுரம் புனித வளனார் சர்ச்சில் பாதிரியார் ஜோசப், பாஸ்டின்நகர் துாய பவுல் சர்ச்சில் பாதிரியார் ஜெயராஜ் உள்ளிட்ட அனைத்து சர்ச்சுகளிலும் இரவு 11:00 மணி முதல் 11.45 மணி வரை 2025ம் ஆண்டிற்கான நன்றி வழிபாடும், அதனைத் தொடர்ந்து புத்தாண்டை வரவேற்று சிறப்பு திருப்பலிகளும், ஆராதனைகளும் நடந்தன.
நகரில் பல்வேறு ஓட்டல்கள், முக்கிய இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் விமரிசையாக நடந்தன. பெண்கள், இளைஞர்கள் கேக் வெட்டி புத்தாண்டை உற்சாகமாக வரவேற்று மகிழ்ந்தனர். நகர் பகுதி முழுவதும் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

