sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மதுரையில் பறவைகள் சரணாலயத்திற்கு சீரமைக்கப்பட்ட வண்டியூர் கண்மாயில்  ஆர்வத்துடன் ஆர்வலர்கள்

/

மதுரையில் பறவைகள் சரணாலயத்திற்கு சீரமைக்கப்பட்ட வண்டியூர் கண்மாயில்  ஆர்வத்துடன் ஆர்வலர்கள்

மதுரையில் பறவைகள் சரணாலயத்திற்கு சீரமைக்கப்பட்ட வண்டியூர் கண்மாயில்  ஆர்வத்துடன் ஆர்வலர்கள்

மதுரையில் பறவைகள் சரணாலயத்திற்கு சீரமைக்கப்பட்ட வண்டியூர் கண்மாயில்  ஆர்வத்துடன் ஆர்வலர்கள்


ADDED : மார் 02, 2026 06:50 AM

Google News

ADDED : மார் 02, 2026 06:50 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை; மதுரையில் முதல்வர் ஸ்டாலின் சீரமைக்கப்பட்ட வண்டியூர் பூங்காவை திறந்து வைத்த நிலையில், 'வண்டியூர் கண்மாயை பறவைகள் சரணாலயமாக மாற்ற வேண்டும்' எனும் சுற்றுசூழல் ஆர்வலர்களின் நீண்டநாள் கோரிக்கை செயல்வடிவம் பெறுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. வண்டியூர் கண்மாய் 687.36 ஏக்கர் பரப்பில் நீண்டுள்ளது. இதன் மூலம் 100 ஏக்கர் வேளாண் நிலங்களுக்கு நீர் பாசனத்திற்கு வழிவகுக்கிறது. மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட் அருகே வரும் சாத்தையாறு கால்வாய், வண்டியூர் கண்மாய் நிறைந்து, மறுகால் நீர் விரகனுார் அருகே வைகையாற்றில் கலக்கிறது. தவிர கருப்பாயூரணி வழியாக முல்லைப்பெரியாறு 9வது பிரதான கால்வாய் நீரும், புதுார் வழியாக வரும் ஆத்திக்குளம் கண்மாய் மறுகால் நீரும், மானகிரி வழியாக வரும் செல்லுார், மதிச்சியம், கரும்பாலை, தல்லாகுளம் கண்மாய் மறுகால் நீரும் வண்டியூர் கண்மாய்க்கு வந்து சேருகிறது.

கண்மாயில் பறவைகள் தங்க 2013ல் ஒரு மணல் திட்டு அமைக்கப்பட்டது. ஆனால் அதில் இன்று சீமை கருவேல மரங்களே இருக்கின்றன. அதை அகற்றி, பறவைகள் தங்கிச் செல்ல சிறு மணல் திட்டுக்களை எழுப்ப வேண்டும். வண்டியூர் கண்மாயின் எழில் கொஞ்சும் அழகையும், பறவைகளையும் கண்டுகளிக்க பார்வையாளர் கோபுர மேடை அமைக்க வேண்டும். இதன்மூலம் ஏராளமான சுற்றுலா பயணிகளை கவர முடியும். 687 ஏக்கர் பரப்பளவு கொண்ட வண்டியூர் கண்மாய் இன்று 550 ஏக்கர் பரப்பளவு கொண்டதாக சுருங்கி விட்டது. மாட்டுத்தாவணி அரசு மற்றும் தனியார் பஸ் ஸ்டாண்ட், பூ மார்க்கெட், மதுரை -- சிவகங்கை நெடுஞ்சாலை விரிவாக்கம் என ஆக்கிரமிப்பு பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது.

பல்லுயிரிய சூழலை பாதுகாக்க சமூக ஆர்வலர் தமிழ்தாசன் : மதுரை மாவட்டத்தில் பல்லுயிரிய பெருக்கமுள்ள ஈரநிலங்களாக வண்டியூர் கண்மாய், குன்னத்துார் கண்மாய், தேனுார் பெரியகுளம் கண்மாய், உரப்பனுார் கண்மாய் தமிழ்நாடு அரசின் ஈரநிலங்கள் இயக்கத்தின் கீழ் சேர்க்க ஏற்கனவே வனத்துறையால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

பூநாரை, நீலச்சிறகி, ஆண்டி வாத்து, நெடுங்கால் உள்ளான், நீலவால் பஞ்சுருட்டான், சூரக்குருவி, பேதை உள்ளான், மீசை ஆலா உள்ளிட்ட 31 வகை வலசை வரும் பறவையினங்களும் வெண்கழுத்து நாரை, பாம்புத்தாரா, கூழைக்கடா, கருந்தலை அன்றில், பட்டைவால் மூக்கன் உள்ளிட்ட அச்சுறுத்தல் பட்டியலில் உள்ள 5 பறவையினங்களும் என மொத்தம் 120க்கும் மேற்பட்ட பறவையினங்களின் புகலிடமாக வண்டியூர் கண்மாய் உள்ளது.

கண்மாயின் ஆக்கிரமிப்புகளை அகற்றி, வரத்து கால்வாயை சீரமைப்பது அவசியம். நீரின் துாய்மையை பாதுகாக்க கண்மாயின் கழிவுநீரை பாதாள சாக்கடை திட்டத்தில் இணைக்கலாம். சாலை விரிவாக்கத்திற்காக சிதைக்கப்பட்ட கண்மாயின் மண் கரைகள் மீண்டும் பலப்படுத்த வேண்டும். நாட்டு மரங்கள் வளர்க்க வேண்டும். படித்துறைகள் கட்டித்தர வேண்டும். கோடை காலத்தில் கண்மாய் துார்வாரப்பட வேண்டும். எந்த வளர்ச்சி பணிகளும் பல்லுயிரியச் சூழலை பாதிக்காததை கவனத்தில் கொள்ள வேண்டும் என்றார்.

எம்மால் இயன்றது அமைப்பு தலைவர் கண்ணன் : 'கண்மாயில் பெருமளவு ஆகாய தாமரை செடிகள் வளர்ந்து பரவிக்கிடக்கின்றன. பல இடங்களில் நீர்நிலைகள் இருப்பதே தெரியாத அளவிற்கு இதன் ஆக்கிரமிப்பு காணப்படுகிறது. இத்தாவரம் அதிகளவு நீரை உறிஞ்சும் தன்மை கொண்டதாக உள்ளது. இதனால் கண்மாயின் நீர் ஆதாரம் குறையும் அபாயம் உள்ளது. இதை முற்றிலும் அகற்றி கண்மாயை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.

வெறும் பொழுதுபோக்கு திட்டங்கள் என்றில்லாமல், பல்வேறு உயிர்கள் பயனடையும் வகையில், பறவைகள் சரணாலயம் போன்ற பல்லுயிர் சார்ந்த சூழலியல் திட்டங்களை அமைக்க அரசு நடவடிக்கை எடுப்பது காலத்தின் கட்டாயம்.

படித்துறைகள் எங்கே

வண்டியூர் கண்மாய்க்குள் மக்கள் மீன் பிடிக்கவும், கால்நடைகளை குளிப்பாட்டவும், முன்னோர்களுக்கு திதி கொடுப்பதற்கும் பல்வேறு படித்துறைகள் இருந்தன. ஆனால் இன்று ஒன்று கூட இல்லை. 100 ஆண்டுகள் பழமையான பொது சாவடியும், விநாயகர், பெருமாள் கோயில் கட்டடமும், 200 ஆண்டுகள் பழமையான ஆலமரமும் சாலை விரிவாக்கத்தின் போது அகற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.








      Dinamalar
      Follow us