எல்லோருக்கும் 'சி.பி.ஆர்.,' விழிப்புணர்வு தேவை; முதலுதவி சிகிச்சை நிபுணர் டாக்டர் லெனின் தகவல்
எல்லோருக்கும் 'சி.பி.ஆர்.,' விழிப்புணர்வு தேவை; முதலுதவி சிகிச்சை நிபுணர் டாக்டர் லெனின் தகவல்
ADDED : ஜூலை 30, 2025 06:54 AM
மதுரை; ''வெளிநாடுகளை போல ஒவ்வொருவரும் அவசர கால 'சி.பி.ஆர்.,' சிகிச்சை குறித்து அறிந்து கொண்டால் திடீரென எங்கோ யாரோ மயக்கமடையும் போது உயிரை காப்பாற்ற உதவும்,'' என, இந்தியன் குழந்தைகள் நல அகாடமி (ஐ.ஏ.பி.,) தென்மண்டல ஒருங்கிணைப்பாளர் டாக்டர் லெனின் தெரிவித்தார்.
மதுரை அரசு மருத்துவமனை குழந்தைகள் நலப்பிரிவு, இந்திய குழந்தைகள் நல அகாடமி சார்பில் சுவாசமின்றி அவசர முதலுதவி சிகிச்சை அளிக்கும் சி.பி.ஆர்., (கார்டியோ பல்மனரி ரிசஸ்டினேசன்) முறை குறித்து பயிற்சி அளிக்கப் பட்டது. குழந்தைகள் நலப்பிரிவு இயக்குநர் அனுராதா, அகாடமி தலைவர் நந்தினி, செயலாளர் செந்தில்குமார், மருத்துவமனை கண்காணிப்பாளர் குமரவேல், ஆர்.எம்.ஓ., சரவணன் பங்கேற்றனர்.
டாக்டர் லெனின் கூறியதாவது:
வீடு, வெளியிடங்களில் திடீரென மயக்கம் அடைபவர்களில் 20 சதவீதம் பேர் சி.பி.ஆர்., சிகிச்சை பெறாமல் வருவதால் உயிரிழக்க நேரிடுகிறது. மருத்துவமனைக்கு வரும் வரை சி.பி.ஆர்., சிகிச்சை அளித்துக் கொண்டே வந்தால் 80 சதவீதம் பேரை காப்பாற்றி விடலாம். இதற்கு கருவிகள் தேவையில்லை. மருத்துவம் படிக்காத அனைவரும் செய்யலாம். மயக்கத்தின் போது இதயம் செயலிழந்து போவதால் மூளைக்கு ரத்தம் போகாது.
பாதிக்கப்பட்டவரின் மார்பு நடுவில் கைகளை வைத்து ஒரு நிமிடத்திற்கு 100 முறை கையால் அழுத்தம் (சி.பி.ஆர்., ) கொடுக்க வேண்டும். மார்பை கையால் அழுத்துவதன் மூலம் அவரது இதயத்தில் இருந்து மூளை, சிறுநீரகம், இதயத்திற்கு ரத்தஓட்டம் செல்வதற்கு உதவுகிறோம்.
மூளைக்கு ரத்தம் சென்றால் மருத்துவ சிகிச்சைக்கு பின் மூளை நன்றாக செயல்படும். தொடர்ந்து 30 முறை மார்பை அழுத்தி விட்டு இருமுறை வாயால் மூச்சுகாற்றை வேகமாக செலுத்த வேண்டும். மூச்சுக்காற்று செலுத்தும் போது அவரது நுரையீரல் வேகமாக விரிவடையும். சி.பி.ஆர்., சிகிச்சை அளிக்காமல் உயிரை காப்பாற்றினாலும் மூளை பாதிப்படைந்து விட்டால் அவரால் சுயமாக செயல்பட முடியாது. ஒருவருக்கு நீங்கள் அளிக்கும் சி.பி.ஆர்., சிகிச்சையானது அவரை மட்டுமல்ல அவரைச் சார்ந்த குடும்பத்தினரையும் பொருளாதாரத்தில் இருந்து மீட்க உதவுகிறது.
இந்தியாவில் ஜூலை முழுவதும் 8 லட்சம் பேருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளோம். பள்ளிகளில் இதுகுறித்து பயிற்சி அளித்தாலும் இன்னமும் விழிப்புணர்வு குறைவாக உள்ளது. வெளிநாடுகளைப் போல ஒவ்வொருவரும் இதுகுறித்து தெரிந்து கொள்ள வேண்டும்.
இணையதளத்தில் 'இ சஞ்சீவானி போர்ட்டல்' (www.iapalsbls.com) பயன்படுத்தி கற்றுக் கொண்டால் ஆன்லைன் சான்றிதழ் வழங்கப்படுகிறது. அட்வான்ஸ் பயிற்சியும் தனியாக தரப்படுகிறது என்றார்.
