பா.ஜ., விற்கு எல்லாமே வியாபாரம்: மாணிக்கம் தாகூர்
பா.ஜ., விற்கு எல்லாமே வியாபாரம்: மாணிக்கம் தாகூர்
ADDED : ஜூலை 15, 2026 02:59 AM
அவனியாபுரம்: ''அயோத்தி ராமருக்கே நீதி வாங்கும் நிலையில் இருக்கிறோம்; பா.ஜ., விற்கு எல்லாமே வியாபாரம்'' என காங்., மாநில தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி., தெரிவித்தார்.
மாநில தலைவராக பொறுப்பேற்ற பின் முதல்முறையாக மதுரை வந்த அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் அவர் கூறியதாவது:
த.வெ.க., அரசின் வெற்றிகளும் செயல்பாடுகளும், முதல்வர் விஜயின் செயல்பாடுகள் அனைத்தும் மக்களை முதன்மையாகக் கொண்ட அரசியல். ஒவ்வொரு தமிழருக்குமான அரசியலாக புதுமையாக எடுத்து செல்கிறார். அதனால் இந்த அரசியல் வெற்றி எங்களுடைய வெற்றியாக இருக்கும்.
மேகதாது அணையை மத்திய அரசு அனுமதி இல்லாமல், தமிழக அரசின் ஆதரவு இல்லாமல் கட்ட முடியாது. கர்நாடக அரசியல்வாதிகள் மேகதாதுவை வைத்து அரசியல் செய்யலாம். ஆனால் தமிழகத்தில் கட்சிகள் ஒருமித்த கருத்துடன் மாநில நலனை மையமாக வைத்து, அரசியல் ஆக்காமல் நமது நியாயத்தை எடுத்து கூற வேண்டிய காலகட்டம் இது.
பா.ஜ.,- ஆர்.எஸ்.எஸ்.,காரர்கள் அயோத்தி ராமர் கோயில் உண்டியலில் கைவைத்து விட்டார்கள். பா.ஜ., வினர் உண்டியல் களவாணிகள் என்பது தெரிந்துள்ளது. பிரதமர் மோடி ராமர் கோயிலை திறக்க சென்றார். இப்போது திருட்டு நடந்துள்ளது. அதைப்பற்றி வாயை திறக்கவே இல்லை. இதுகுறித்து லோக்சபாவில் நிச்சயம் பேசுவோம்.
ராமருக்கே நீதி வாங்கும் நிலையில் இருக்கிறோம். பா.ஜ., விற்கு எல்லாமே வியாபாரம்.
நன்றாக இருந்த அ.தி.மு.க., வை ஒன்றும் இல்லாமல் ஆக்கிய பொறுப்பு, அ.ம.மு.க., பொதுச் செயலாளர் தினகரனைத்தான் சேரும். அவர் அ.தி.மு.க., வை ஒன்றிணைத்திருக்கலாம். எம்.ஜி.ஆர்., ஆரம்பித்த கட்சி இந்த சூழலுக்கு வந்திருக்காது என்றார்.
