/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
எல்லாமே இருக்கு... ஆனால் எதுவுமே இல்லை... புதிரான அஞ்சல்நகர், பெரியார் நகர் வாசிகள் புலம்பல்
/
எல்லாமே இருக்கு... ஆனால் எதுவுமே இல்லை... புதிரான அஞ்சல்நகர், பெரியார் நகர் வாசிகள் புலம்பல்
எல்லாமே இருக்கு... ஆனால் எதுவுமே இல்லை... புதிரான அஞ்சல்நகர், பெரியார் நகர் வாசிகள் புலம்பல்
எல்லாமே இருக்கு... ஆனால் எதுவுமே இல்லை... புதிரான அஞ்சல்நகர், பெரியார் நகர் வாசிகள் புலம்பல்
ADDED : ஜன 18, 2024 06:32 AM

மதுரை : எல்லாமே இருந்தும்... எதுவுமே இல்லாததுபோலத்தான் வசிக்கிறோம்'' என மதுரை மாநகராட்சி 2வது வார்டு அஞ்சல்நகர், பெரியார் நகர் குடியிருப்போர் நலச்சங்கத்தினர் வேதனை தெரிவிக்கின்றனர்.
சங்கத்தலைவர் பிரின்ஸ்டைன், செயலாளர் தியாகராஜன், பொருளாளர் திருநாவுக்கரசு, நிர்வாகிகள் கண்ணம்மாள், சந்திரசேகர், நெல்லையப்பர், ராஜேந்திரன், முனியாண்டி, ராஜா கூறியதாவது:
ஊராட்சி நிர்வாகத்தில் இருந்து மாநகராட்சிக்கு மாறிய வார்டு இது. அஞ்சல்நகரில் 3 தெருக்கள், 4 குறுக்குத்தெருக்கள், பெரியார் நகரில் 7 தெருக்களில் 200 குடியிருப்புகள் உள்ளன. இங்கு பாதாள சாக்கடைக்காக ரோடு தோண்டி இரண்டரை ஆண்டுகளாகிறது. பிரதான குழாய் இணைப்பு கொடுத்துவிட்டனர். அதில் இருந்து வீடுகளுக்கான குழாய் இணைப்பு இன்னும் வழங்காததால் பழைய முறைப்படியே கழிவுநீர் வெளியேற்றப்படுகிறது.
காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் மேல்நிலைத் தொட்டிகள் மூலம் குடிநீர் ஏற்றி வீடுகளுக்கு காலை 6:00, 7:00 மணிக்கு விநியோகிக்கின்றனர். தண்ணீர் வராத நேரங்களில் மாநகராட்சி லாரிகளில் விநியோகம் செய்வதில்லை. அப்போதெல்லாம் குடிநீரை விலை கொடுத்து வாங்க வேண்டியுள்ளது. ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் 75 சதவீத வீடுகளுக்கு மட்டுமே குடிநீருக்கான குழாய் பதிக்கப்பட்டுள்ளது. மீதியுள்ள வீடுகளுக்கும் இணைப்பு வழங்க வேண்டும்.
பாதாள சாக்கடை பணி முடியாத நிலையில் பெரியார் நகர் பகுதியின் சில இடங்களில் ரோடு அமைத்துள்ளனர். ஏற்கனவே உள்ள ரோட்டை முழுவதும் தோண்டி புதிதாக அமைக்காததால் வீடுகள் பள்ளமாகவும் ரோடு மேடாகவும் மாறிவிட்டது.
இப்பகுதி களிமண் பூமி என்பதால் மழை பெய்யும் போதெல்லாம் சகதியில் வாகன ஓட்டிகளும் பாதசாரிகளும் வழுக்கி விழுகின்றனர். தேங்கியுள்ள மழைநீர் வடிந்து செல்ல வழியில்லை. நல்ல வெயில் அடித்தால் மட்டுமே இதற்கு விடிவு கிடைக்கிறது. மேல்நிலை குடிநீர்த்தொட்டி நிரம்பும் போது வெளியேறும் உபரிநீர் குழாய் வழியாக அருகிலுள்ள ஊருணிக்குள் செல்கிறது. இந்த குழாய் உடைந்துள்ளதால் தண்ணீர் ரோட்டில் தேங்குகிறது.
வி.ஏ.ஓ., அலுவலகம் அருகேயுள்ள ஊருணி பராமரிப்பின்றி புதர் மண்டி கிடக்கிறது. அதனை சுத்தப்படுத்தி ஆழப்படுத்தி, 4 கரைகளையும் பலப்படுத்த வேண்டும். பூங்கா இல்லாததால், ஊருணி கரையை நடைபாதையாக மாற்றினால் மக்களின் பொழுதுபோக்கு, நடைப்பயிற்சிக்கு உதவியாக இருக்கும்.
தெருவிளக்குகளின் தானியங்கி காப்பர் கருவிகள் திருடப்பட்டுள்ளன. இதனால் தெருவில் உள்ளவர்களே தினமும் இரவில் விளக்குகளை ஒளிரவிடுவது, காலையில் அணைப்பது என உள்ளனர். எரியாத விளக்குகள் குறித்து மாநகராட்சிக்கு புகார் தெரிவித்தால் நடவடிக்கை இல்லை. இங்கு பாதாள சாக்கடை திட்டம், ரோடு சீரமைப்பு, ஊருணியைச் சுற்றி நடைபாதை பணிகளை விரைந்து முடிப்பது அவசியம் என்றனர்.